சென்னை : பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘சூப்பர் ஓவர்’ முறையில் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று, தொடரின் 16வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் நடந்தது. இதில் ரெய்னா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சங்ககராவை கேப்டனாக கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது.
டில்லி, பெங்களூரு, டெக்கான் அணிகளுக்கு எதிராக தோல்வி கண்ட பஞ்சாப் அணி, முதல் வெற்றியை நோக்கி களமிறங் கியது. கோல்கட்டா, டில்லி அணிகளை வீழ்த்திய சென்னை அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி களம் புகுந்தது. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் ரெய்னா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
யுவராஜ் ஆறுதல்: முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ரவி போபரா (1) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா (15), ஜெயவர்தனா (3) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பொறுப்புடன் ஆடிய இர்பான் பதான் (39) ஓரளவு நம்பிக்கை தந்தார். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங், 28 பந்தில் 43 ரன்கள் (2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆறுதல் அளித்தார்.அடுத்து களமிறங்கிய கைப் (14), பிஸ்லா (7), ஜுயன் திரான் (0), பியுஸ் சாவ்லா (8*), ரமேஷ் பவார் (2*) ஏமாற்றினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. துல்லியமாக பந்துவீசிய முரளிதரன் 3, ஆல்பி மார்கல் 2, பாலாஜி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஹைடன், பார்த்திவ் படேல் சூப்பர் துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது, ஹைடன் (33) அவுட் டானார். தோனி இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரெய்னா (15), சோபிக்க தவறினார். தமிழக வீரர்களான முரளி விஜய் (0), பத்ரிநாத் (2) ஏமாற்றினர்.விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய பார்த்திவ் படேல், ஐ.பி.எல்., அரங்கில் தனது 3வது அரைசதமடித்தார். இவர் 57 ரன்கள் எடுத்தபோது, சாவ்லா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கோனி (2), அஸ்வின் (2), மார்கல் (12*) ஏமாற்ற, சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இப்போட்டி ‘டை’ ஆனது.
‘சூப்பர் ஓவர்’: இதனால் போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவர்’ முறைக்கு சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். இதில் அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு, பஞ்சாப் வீரர் திரான் பந்துவீசினார். முதல் பந்தில் மார்கல் ஒரு ரன் எடுக்க, 2வது பந்தில் ஹைடன் போல்டானார். அடுத்த மூன்று பந்தில் ரெய்னா, ஒரு இமாலய சிக்சர் உட்பட 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். சென்னை அணி 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, முரளிதரன் பந்து வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த ஜெய வர்தனா, 2வது பந்தில் வெளி யேறினார். மூன்றாவது பந்தை வீணடித்த யுவராஜ், 4வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி, 3வது ஐ.பி.எல்., தொடரில் முதல் வெற்றியை ருசித்தது. ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் திரான் தேர்வு செய்யப்பட்டார்.
‘வணக்கம் தலைவா’ : ‘டாஸ்’ போடுவதற்காக மைதானத்துக்குள் வந்த முன்னாள் இந்திய கேப்டன் ரவிசாஸ்திரி, ரசிகர்களை நோக்கி ‘வணக்கம் தலைவா எப்படி இருக்கீங்க’ என மீண்டும் தமிழில் பேசி அசத்தினார்.
முரளி ஜாலம் : நேற்று, துல்லியமாக பந்து வீசிய சென்னை அணியின் முரளிதரன் 4 ஓவரில் 16 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். இலங்கையை சேர்ந்த இவர், சங்ககரா, ஜெயவர்தனா உள்ளிட்ட சக இலங்கை வீரர்களின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினார்.
ஏமாற்றிய ‘மங்கூஸ்’ : டில்லி அணிக்கு எதிராக ‘மங்கூஸ்’ வகை பேட் பயன்படுத்தி அசத்திய ஹைடன், நேற்றைய போட்டியில் பயன்படுத்த வில்லை. ஆனால், ‘சூப்பர் ஓவர்’ சுற்றில் ‘மங்கூஸ்’ பேட்டுடன் களமிறங்கிய இவர், முதல் பந்தில் ‘போல்டாகி’ ஏமாற்றினார்.
Leave a Reply