சேதுசமுத்திரத் திட்ட வழக்கில், மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் பரிசீலித்து, விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதி மேற்கொள்ள முடிவு செய்தது
சேது கால்வாய் திட்டத்தை ராமர் பாலம் வழியாக நிறைவேற்றாமல் தனுஷ்கோடி வழியாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த விசாரணையின்போது ஆராயப்படும்.
“சேதுகால்வாய் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராமர் பாலத்தை அழித்து அந்த வழியாக கால்வாய் அமைப்பது இந்து மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும். மேலும் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாற்றுப்பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் பணி, தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மாற்றுப்பாதை வழியாக சேது கால்வாய் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தேசிய கடல் சார் ஆய்வு நிறுவனம் முதல் கட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதையடுத்து, இந்தப் பிரச்னையில் அரசு தனது நிலையை விரைவில் தெரிவிக்க, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் முதல்கட்ட அறிக்கையை நிபுணர்கள் கடந்த நவம்பர் 10-ம் தேதி ஆய்வு செய்தனர். தனுஷ்கோடி வழியாக சேது கால்வாய் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து 18 மாதங்களில் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு
தேசிய கடல்சார் நிறுவனத்துக்கு அப்போது உத்தரவிடப்பட்டது. எனவே தேசிய கடல்சார் நிறுவனத்தின் முதல் கட்ட அறிக்கையை இறுதி அறிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது.
சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்தப் பிரச்னையில் இறுதி முடிவுக்கு வர முடியும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயும் பணி மிகவும் கடினமானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான அறிக்கையை அரசு விரைவில் தாக்கல் செய்வதற்கான அறிகுறியே இல்லை. ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சுவாமி கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்று வரும் ஏப்ரல் 5-ம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
Leave a Reply