புதுடில்லி: பார்லிமென்ட்டுக்கு சைக்கிளில் வரும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப்புக்கு சைக்கிளை நிறுத்துவதற்கு இடமளிக்க காவலர்கள் மறுத்து வருகின்றனர்.
டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஒரே மகன் சந்தீப். லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். பார்லிமென்ட் அருகே வீடு உள்ளதால், சைக்கிளில் வந்து பார்லிமென்ட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பார்லிமென்ட் வளாகத்தில், இவரை தாண்டி ஏராளமான எம்.பி.,க்களின் கார்கள் தடையின்றி செல்கின்றன. ஆனால், சைக்கிளில் வரும் சந்தீப்புக்கு பார்லிமென்ட் வளாகத்தில், சைக்கிளை நிறுத்த காவலர்கள் அனுமதிப்பதில்லை.
பார்லிமென்ட் செயலகத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டு ஒட்டப்பட்டுள்ளதால், கார்களை காவலர்கள் அனுமதிக்கின்றனர். ஆனால், சைக்கிளில் இந்த சீட்டை ஒட்டாத காரணத்தால், சந்தீப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, சைக்கிள் ஸ்டாண்டுக்கான இடமும் பார்லிமென்ட்டில் இல்லை. இதனால், சந்தீப், போக்குவரத்துத்துறை அமைச்சக வளாகத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு பார்லிமென்ட்டுக்கு செல்கிறார். பார்லிமென்ட்டில் சைக்கிளை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கும் படி சபாநாயகர் மீரா குமாரிடம் சந்தீப் கோரியுள்ளார். சந்தீப்பின் கோரிக்கைக்கு பிஜு ஜனதா தள கட்சி எம்.பி., பிரத்ருஹரி மகாதப் ஆதரவளித்துள்ளார். ‘பார்லிமென்ட் வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைத்தால் நான் கூட சைக்கிளில் வருவேன்’ என, பிரத்ருஹரி தெரிவித்துள்ளார். இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில், ‘பார்லிமென்ட் வளாகத்துக்குள் காரில் வருவதை விட நடந்தே வரலாம்’ என்கிறார்.
Leave a Reply