சென்னை : பென்னாகரம் தேர்தலில் தி.மு.க., வென்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:ஓட்டுக்கு பணம் கொடுத்து, ஜனநாயகத்தை பாழாக்காதீர்கள் என்றார் அண்ணாதுரை. இதற்கு முற்றிலும் முரணான வகையில், மக்களாட்சியின் மாண்பையே அழிக்கும் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.நான்காண்டு கால ஆட்சியில் நடந்த அத்தனை தேர்தல்களிலும், போலீஸ் துணையோடு, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்களை மிரட்டுவதுமான ஜனநாயக விரோதச் செயல்கள் தான் நடந்து வருகின்றன.பென்னாகரத்தில் ஆளுங்கட்சியினரால் பணம் தண்ணீர் போல வாரி இறைக்கப்பட்டது. வேட்டி, சேலை, பணம், மதுபானம், மூக்குத்தி, கறி விருந்து, கலர் ‘டிவி’, சமையல் காஸ் சிலிண்டர், கிரைண்டர் என அனைத்தும், வாக்காளர்களுக்கு வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டன.
ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை ஆதாரத்துடன் எடுத்துக் கூறியும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக போலீசாரை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது என அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தியும், அதை தேர்தல் கமிஷன் அலட்சியப்படுத்தி வருகிறது.பென்னாகரம் இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவது பெரிய சவாலாக உள்ளது என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்ததில் இருந்தும், இதுகுறித்து தலைமைச் செயலருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்ததில் இருந்தும், இந்த இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு அராஜகம் நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு வேண்டிய சேனல் ஒன்று, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முந்தைய நாள் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. கடைசியில் அது தான் நடந்தது.அதே போல, இந்த இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறியதையும், ஆளுங்கட்சியாக இருந்த கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது எனவும், எதிர்காலத்தில் டிபாசிட் இழக்கக்கூடிய நிலைக்கு வருமா என்று, தான் கவலைப்படுவதாகவும் கருணாநிதி கண்ணீர் வடித்ததையும் பார்க்கும் போது, இந்தத் தேர்தல் முடிவில், மிகப் பெரிய சதி நடந்திருப்பது தெளிவாகிறது.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தோல்வி. இந்த இடைத்தேர்தலில் பா.ம.க.,வும் இதுவரை கண்டிராத வகையில், பெருமளவில் பணத்தைக் கொட்டி, தி.மு.க., கடைபிடித்த அதே முறையைத் தான் கடைபிடித்துள்ளது.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., டிபாசிட் இழப்புக்கு காரணம் உட்கட்சி மோதல் : பென்னாகரம் தொகுதிக்கு டிசம்பரில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க., மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடந்தது. அதே நேரம், தர்மபுரி மாவட்ட செயலராக இருந்த கிருஷ்ணமூர்த்தி மாற்றப்பட்டு, பென்னாகரம் தொகுதி வேட்பாளர் அன்பழகன், மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார்.தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர் அன்பழகனுக்கே சீட் கிடைக்கும் என்ற பேச்சு இருந்த போதும், மனு தாக்கல் வரையில் அ.தி.மு.க., தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பொறுப்பாளராக வெள்ளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்த தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.தர்மபுரி மாவட்ட செயலராக இருந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை. இதே போன்று உள்ளூர் வன்னிய மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தம்பிதுரை தன் ஆதரவாளர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கினார்.
பிற கட்சிகளில் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளில் அக்கறை காட்டினர். அ.தி.மு.க.,வில் முழுக்க, முழுக்க வெளியூர் ஆட்களை நம்பி தேர்தல் பணிகளில் இறங்கினர். கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், தொகுதியில் வலு பெற்று இருந்த போதும், அவர்களை காலம் கடந்து சந்தித்தனர்.இதனால், அ.தி.மு.க.,வில் நிலவிய அதிருப்தியாளர்களை தி.மு.க.,வினர் தங்கள் வலைக்குள் எளிதில் விழ வைத்தனர். தி.மு.க., – பா.ம.க., ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் அதிக கவனம் செலுத்தினர்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ஒரு வாரம் வரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாட்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஜெயலலிதா பிரசாரத்தில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக பேசினார். அதே போல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ‘திட்டப்பணிகள் துவங்கவில்லை’ என்ற அவரது பிரசாரம் தொகுதி மக்களை யோசிக்க வைத்தது. ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை முடித்த மறு நாளே தொகுதியில் முகாமிட்டிருந்த அ.தி.மு.க.,வினர் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர்.தேர்தல் கடைசி கட்டத்தில் அ.தி.மு.க.,வின் தேர்தல் பணிகள் பெருமளவில் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க.,வினரின் அக்கறையில்லாத தேர்தல் சந்திப்பு, தலைமையின் சுறுசுறுப்பில்லாத பேச்சு உள்ளிட்ட காரணங்களோடு, ஜாதிய பூசலால் டிபாசிட்டை கூட தக்கவைக்க முடியாமல் பரிதாப தோல்வியை அ.தி.மு.க., இத்தேர்தலில் சந்தித்துள்ளது.பா.ம.க., 1996ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட போது 34 ஆயிரத்து 906 ஓட்டுக்கள் பெற்றனர். அதை விட தற்போது கூடுதல் ஓட்டு கிடைத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம் : பென்னாகரம் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் உட்பட 31 பேர் போட்டியிட்டனர். அவற்றில் சுயேச்சைகள் ஓட்டுக்களை சில்லரையாக பெற்றதால் அ.தி.மு.க., – தே.மு.தி.க., வேட்பாளர்கள் டிபாசிட் இழந்துள்ளனர்.வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:இன்பசேகரன் (தி.மு.க.,) 77,669,தமிழ்குமரன்(பா.ம.க.,) 41,285, அன்பழகன்(அ.தி.மு.க.,) 26,787, காவேரிவர்மன்(தே.மு.தி.க.,) 11,406,
சுயேச்சைகள்: அண்ணாதுரை 813, தேவேந்திரன் 243, வஜ்ரவேல் 945, சி. அன்பழகன் 238, டி.சி.அன்பழகன் 212, ராமலிங்கம் 215, சிவ.இளங்கோ 313, இளவரசன் 289, கந்தன் 385, கஸ்பா ராஜேந்திரன் 637, குமார் 782, கோபால் 1,053, சாமிக்கண்ணு 718, சிவகுமார் 1,220, தாமோதரன் 1,007, நூர்முகமது 216, பத்மராஜன் 254, பழனி 121, பெருமாள் 158, முருகேசன் 711, முனிராசு 774, முனுசாமி 158, ரத்தினம் 111, ராஜாஜி 211, லெனின் 443, வெங்கடாசலம் 780, ஸ்ரீராமச்சந்திரன் 676.சுயேச்சை வேட்பாளர்கள் ஓட்டுக்களை விழுங்கியதால் அ.தி.மு.க., டிபாசிட் இழக்கும் பரிதாப நிலையை சந்தித்துள்ளது. 2006 சட்டசபை தேர்தலில் 16 பேர் போட்டியிட்ட நிலையில், இத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்ததும் அ.தி.மு.க., – தே.மு.தி.க., தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
Leave a Reply