சென்னை:ஆந்திராவில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரி மூலம் கடத்தி வரப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக ஒருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பவானி பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து, 325 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதுடன், இது தொடர்பாக ஐந்து பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து டேங்கர் லாரி மூலம் சென்னை வழியாக கஞ்சா கடத்தப்படுவது தெரிந்தது.இது தொடர்பாக, டி.ஐ.ஜி., ஆறுமுகம் உத்தரவின்படி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வடபழனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு
இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை இட்டனர்.
சந்தேகத்தின் பேரில் டேங்கரில் உள்ளே இறங்கி சோதித்த போது, சாக்குப்பை விரித்து அதன் மேல் பண்டல், பண்டலாக கஞ்சா வைக்கப்பட்டிருந்தது. இவற்றை பரிசோதித்ததில் 2,500 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவற்றின் மொத்த மதிப்பு மூன்று கோடி ரூபாய். வாகனத்தை பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது அதன் டிரைவர் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், அங்குவிலாஸ் இறக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(32) என்பது தெரிந்தது.மேலும், கஞ்சா கடத்தலில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பவுன் பாண்டியன், பாலகுமாரன், சாரதி, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ், குமார் மற்றும் லாரி உரிமையாளர் விஜயகுமார் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், விசாரணையில் திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் வினியோகிக்க இந்த கஞ்சா கடத்தப்பட்டது தெரிந்தது.
வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் இருந்து 3,260 கிலோ உலர் கஞ்சா, 13 கிலோ கஞ்சா, 2.7 கிலோ ஓபியம், 10 கிராம் ஹெராயின் என 3.8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Leave a Reply