பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் நிறைவேறுவதால், தமிழகத்தில் இருந்து லோக்சபா மற்றும் சட்டசபைக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது.
பெண்களுக்கு பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் மசோதா, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, தமிழக சட்டசபையில் தற்போதுள்ள மொத்தம் 234 உறுப்பினர்களில், பெண்கள் 77 முதல் 78 பேர் வரை இடம்பெற வேண்டும். லோக்சபாவில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 13 தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
தற்போது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா எம்.பி.,க்களை பொறுத்தவரை, 39 பேரில் ஒருவர் மட்டுமே பெண். தி.மு.க.,வைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன் மட்டுமே தற்போது உள்ளார். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 13ஐ தாண்டும். தமிழக சட்டசபையில் மொத்தம் 22 பெண்களே உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அ.தி.மு.க., சார்பாக, ஜெயலலிதா, இளமதி சுப்பிரமணியன், தேன் மொழி, ராமஜெயம், பதர் சயீது, பிரேமா, சந்திரா ஆகிய ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க., சார்பிலும், பூங்கோதை, கீதா ஜீவன், அங்கயற்கண்ணி, சங்கரி நாராயணன், லதா அதியமான், தமிழரசி, ராணி, பிரபாவதி என எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரசில் இருந்து யசோதா, காயத்ரிதேவி, ராணி வெங்கடேசன் ஆகிய மூவர் மட்டும் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பத்மாவதி மட்டுமே இடம்பெற்றுள்ளார். பா.ம.க., சார்பில் கமலாம்பாள் மட்டுமே இடம்பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் 33 சதவீதம் பெண்கள் உள்ளனர். இக்கட்சியைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது எம்.எல்.ஏ.,க்களில், பாலபாரதி, லீமா ரோஸ், லதா ஆகிய மூன்று பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபாவை பொறுத்தவரை தமிழகத்துக்கு 18 இடங்கள் உள்ளன. இதில், தற்போது மூன்று பேர் பெண்கள் உள்ளனர். தி.மு.க., சார்பில் கனிமொழி, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Leave a Reply