கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்காததால் மின்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க, 2008 செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்வாரியம் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் இரண்டு மணி நேர மின்தடையை அமல்படுத்தியது. போதிய மழை இல்லாததால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதை சமாளிக்க மக்கள், ‘ஏசி’ பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். அதனால், ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான பீக் ஹவரில் மட்டும் மின்தேவை 10 ஆயிரத்து 771 மெகாவாட் ஆக உயர்ந்தது.
தமிழகத்தின் மொத்த அனல், புனல், காற்றாலை நிலையங்கள் மூலம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கோடைகாலம் துவங்கி விட்டதால் புனல், காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக, சராசரியாக 8,700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் பீக் ஹவரில் மட்டும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க இரு ஆண்டுகளாக வாரியம், தினமும் வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின்தடை செய்தது.தற்போதைய கூடுதல் மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வகையில் முயன்றும், மின் வாரியத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முதல் தினமும் மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்தந்த மின் பகிர்மான வட்டங்களில் தேவைக்கு ஏற்ப மூன்று மணி நேர மின்தடை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய, சேலம் மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிராமப்புறங்களில் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் 12 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படும்’ என, கூறியுள்ளார்.
வரும் மே மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிடில் மின்தேவை மேலும் அதிகரிக்கும். அதனால், மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.ஏற்கனவே போதிய மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி டெல்டா மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு, மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே மின் சப்ளை முறையாக இல்லாமல் இருக்கும் போது, இந்த அறிவிப்பால், இனி அந்தந்தப் பகுதியில் மின் வெட்டு மேலும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தும்.
மின்தடை செய்வதில் புது யுக்தி :மின்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய யுத்தியை கையாள மின் வாரியம் முடிவெடுத்துள்ளது. மின் உற்பத்தி மையங்களில், மின் அளவையில் அடிக்கடி கணக்கிட்டு, பற்றாக்குறைக்கு ஏற்ப மின்தடை செய்ய, சென்னையில் உள்ள மின்பளு அனுப்புகை மையங்களுக்கு (மெயின் லோ டெஸ்பேட்ச் சென்டர்) தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து, மண்டல துணை மின்பளு அனுப்புகை மையங்கள் மூலம், துணை மின்நிலையத்தில், மின்தடை செய்யப்படுகிறது. தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய மின் வாரியம் ஆலோசித்து வருகிறது. துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு, தேவை, நிலை குறித்து, ‘லீஸ்லைன்’ வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறது.இந்த அடிப்படையில் மின்தடை செய்ய, ‘ஸ்கேடா சிஸ்டம்’ அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை மின்பளு அனுப்புகை மையத்தில் இருந்து பற்றாக்குறைக்கு ஏற்ப, அங்கிருந்தே தடை செய்து கொள்ளும், யுக்தியை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
Leave a Reply