தமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்

posted in: அரசியல் | 0

arcotதமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்” என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட தமிழ் வழியிலான இணையதளத்தை, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி. பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

“”சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இது, மே 31 வரை நீடிக்கும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியில் 8 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூடங்குளத்தின் முதல் பிரிவில் ஜூனிலும், 2}வது பிரிவில் டிசம்பரிலும் மின் உற்பத்தி தொடங்கும்.

கோடைகாலத்தில்:

கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படுவது இயற்கையானது. தமிழகத்தின் ஒரு நாள் மின்தேவை 10,500 மெகாவாட்டாக உள்ளது.

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய பக்கத்து மாநிலங்களில் இருந்து நியாயமான விலைக்கு மின்சாரத்தைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

600 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களைப் பாதிக்காத வகையில் மின்வெட்டு செய்யப்படுகிறது.

கிராமப்புறங்களில் இரண்டு மணி நேரத்தைத் தாண்டி மின்வெட்டு செய்யப்படுவதாகக் கூறுவது தவறு. கூடுதல் நேரம் மின்வெட்டு இருந்தால், மின்மாற்றிகளில் உள்ள கோளாறால் மட்டுமே ஏற்பட்டு இருக்கும்.

இணையதள சேவை: தமிழகத்தில் 2.7 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். மின் பயன்பாடு குறித்தத் தகவல்கள், சேவைகள் குறித்த தகவல்கள் மின்சார வாரியத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. இப்போது, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் தமிழிலும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது”

இணையதள முகவரி: www.tneb.in/​tamilweb9.bhp​

மின் கட்டணம் உயருமா?

“மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தேச கட்டண விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணத்தை அதிகரிப்பது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கை தயாரிக்கப்படும்.

அதன்பின்பே, மின் கட்டணத்தை உயர்த்துவதா?

இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இணையதளம் வழியாக மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படும்’ என்றார் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *