தியாகிகளை போற்றுவதில் தமிழகம் முன்னோடி: முதல்வர் கருணாநிதி பெருமிதம்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_8947390318சென்னை:”சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ்ச் சான்றோர்களை போற்றுவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது,” என, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி, சிறையிலிருந்தே உயிர்விட்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா, தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்தது.தலைமைச் செயலர் ஸ்ரீபதி தலைமை வகித்தார். ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அஞ்சல் தலையை முதல்வர் கருணாநிதி வெளியிட, முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத் தலைவர் சுந்தரசாமி பெற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:வீரம் செறிந்த தமிழ் மண்ணில் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்களில் மறவர் குலத்து மாவீரன் முத்துராமலிங்க சேதுபதி முக்கியமானவர்.ராமநாதபுரம் அரண்மனையில் 1760 மார்ச் 30ல் பிறந்தார். 12 வயதில் இளவரசரானார். ஆற்காடு நவாப்பும், கும்பெனி படையினரும் கோட்டையைத் தாக்கி சேதுபதி, அவரது சகோதரியையும், திருச்சி சிறையில் அடைத்தனர். ராமநாதபுரத்தில் ஏற்பட்ட புரட்சியால், 10 ஆண்டுகளுக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.பின், ராமநாதபுர மன்னரான சேதுபதி, தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தவர்களை பழிவாங்க துடித்தார். டச்சுக்காரர்களுடன் சேர்ந்து ராமநாதபுரம் காட்டுப் பகுதியில் ஆயுத தொழிற்சாலையைத் துவக்கி படைபலத்தை பெருக்கினார்.

கைத்தறி துணிகளை தங்களுக்கே விற்க வேண்டும், சுங்கவரி கட்ட வேண்டுமென்ற கும்பெனியரின் எல்லா கோரிக்கைகளையும் நிராகரித்தார்.விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கும்பெனியரின் ஆணையை நிராகரித்ததால், ஆத்திரமடைந்த கும்பெனியினர் 1795 பிப்., 8ல் ராமநாதபுரம் அரண்மனையை முற்றுகையிட்டு, முத்துராமலிங்க சேதுபதியை திருச்சி சிறையில் அடைத்தனர்.பின், சென்னை கோட்டையில் அடைத்தனர். 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேதுபதி, 1809 ஜன., 23ல் சிறையிலேயே மறைந்தார். வாழ்ந்த சரிபாதி காலம், 24 ஆண்டுகள் சிறையிலேயே அடைபட்டிருந்தார். அவர் அடைக்கப்பட்ட கோட்டையிலேயே, அவரது அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகள், சான்றோர்களை போற்றுவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. கோட்டையில் நினைவுச் சின்னம், உருவச் சிலைகள், மத்திய அரசு மூலமாக நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. தியாகிகள், சான்றோர்களை தமிழக அரசு பெருமைப்படுத்தி வருகிறது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழக முதன்மை அஞ்சல் துறை தலைவர் சாந்தி நாயர், கவிஞர் வைரமுத்து, பரிதி இளம்வழுதி உள்ளிட்ட அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *