பெங்களூரு:’திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது சரி என யார் தெரிவித்துள்ளனர்’ என, பஞ்சாப் – அரியானா கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், பா.ஜ., எம்.பி.,யுமான ராமா ஜாய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் கருத்து தெரிவித்தது.
நடிகை குஷ்பு தொடர்பான விவகார வழக்கு விசாரணையில், திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் விரும்பும் பட்சத்தில் ஒன்றாக வாழலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ராமா ஜாய்ஸ், திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு தவறானது என, புராணங்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:திருமணம் மூலம் மட்டுமே ஒருவர் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும், அது தான் தர்மம் என மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதை அது தடுக்கிறது. திருமணத்தின் நோக்கம் மற்றும் தேவை ஆகியவை உடலுறவு சம்பந்தமும் இருந்தாலும், அதை மட்டுமே பூர்த்தி செய்வதல்ல, என்று தர்மசாஸ்திரங்கள் தெரிவித்துள்ளன.
கணவன், மனைவி பரஸ்பர விசுவாசம், பரஸ்பர நம்பிக்கை, மற்ற பேராசைகளில் விழுந்து விடாமல் தடுக்கும் வகையில் திருமண பந்தம் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆகவே, திருமண பந்தம் இன்றி இணைந்து வாழ்வது தவறல்ல என்று பேசுகிறவர்களிடம், அது சரியானது என்று எங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று எதிர்கேள்வி தான் கேட்க வேண்டும்.
நித்யானந்தருக்கு ஜாமீன் மறுத்து விட்டது ஐகோர்ட்
பெங்களூரு:நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனுவை ஏற்க பெங்களூரு ஐகோர்ட், மறுத்து விட்டது.கர்நாடகா, பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தாவுக்கு எதிராக, தமிழக போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அவரது சீடர் தர்மானந்தா என்பவர் இந்த புகாரை அளித்தார். குற்றம் நடந்ததாக கூறப்படும் பிடதி ஆசிரமம் பெங்களூரில் இருப்பதால், இந்த வழக்கை தமிழக போலீசார், கர்நாடக போலீசார் வசம் ஒப்படைத்தனர்.கர்நாடக போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, நித்யானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி அராலி நாகராஜ் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி,’இந்த வழக்கில், தான் கைது செய்யப்படுவோம் என, நித்யானந்தா பயப்படுவது தேவையற்றது. தனக்கு முன்ஜாமீன் வேண்டுமானால் முறைப்படி, கீழ் கோர்ட்டை அவர் அணுகலாம். மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற நித்யானந்தாவின் கோரிக்கையையும் ஏற்க முடியாது’ என்றார்.
Leave a Reply