தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா,​​ பிரிட்டன் வலியுறுத்தவேண்டும்: ப.​ சிதம்பரம்

posted in: உலகம் | 0

chidambaramலண்டன்,​​ மார்ச் 25: ​ தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா,​​ பிரிட்டன் போன்ற நாடுகள் வலியுறுத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் கூறினார்.

லண்டன் வந்துள்ள அவர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:

பாகிஸ்தானில் அல் காய்தா,​​ லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத முகாம்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன.​ அங்கிருந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் ஊடுருவுமாறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த முகாம்களை அழிப்பதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு இதுவரை ஈடுபடவில்லை.​ எனவே அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா,​​ பிரிட்டன் போன்றவை வலியுறுத்தவேண்டும்.

அங்குள்ள முகாம்கள் மூடப்படவேண்டும்.​ அங்கு கொடுக்கப்பட்டு வரும் தீவிரவாத பயிற்சியை முடிவுக்கு வரவேண்டும் என்றார் அவர்.

அதுபோன்ற முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்விக்கு சிதம்பரம் பதிலளிக்கையில் இதுவரை அதுபோன்று நடக்கவில்லை என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு மட்டுமே பாதிப்பு என்ற மேற்கத்திய நாடுகள் நினைக்கலாம்.

ஒருமுறை தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சி பெற அனுமதித்தால்,​​ அந்த அமைப்புகள் அங்கு வேரூன்றி விடும்.​ அந்த அமைப்புகளால் இந்தியா மட்டுமல்ல;​ பிரிட்டனைக் கூடத் தாக்க முடியும்.​ டென்மார்க்கைக் கூட தாக்க முடியும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.​ இந்தியா மட்டுமே தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.​ லஷ்கர்-இ-தொய்பா,​​ அல்-காய்தா போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளால் அனைத்து நாடுகளுக்குமே ​ ஆபத்து உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பூனாவில் நடந்த ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டுச் சம்பவத்தில் முன்னதாகவே தகவல் கொடுத்தும் கூட அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.​ மகாராஷ்டிர அரசுக்கு இதுதொடர்பாக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தகவல் கொடுத்திருந்தன.

இதைத் தொடர்ந்து ஜெர்மன் பேக்கரிக்கு 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.​ தீவிரவாத அமைப்புகளால் பேக்கரி தாக்கப்படலாம் என்று ஜெர்மன் பேக்கரி மேலாளரைத் தொடர்புகொண்டு விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டிருந்தோம்.

ஆனால் அவர்கள் விழிப்புடன் இல்லை.​ போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைஅவர்கள் செய்துகொள்ளவில்லை.​ இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று சொல்வேன்.

இந்த சம்பவம் தொடர்பாக ​ நாடாளுமன்றத்தில் பேசும்போது இந்திய வரலாற்றில் கறைபடிந்த சம்பவம் என்று குறிப்பிட்டேன்.​ ​

பூனா குண்டுவெடிப்பு வழக்கில்,​​ பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.​ சதி தீட்டப்பட்ட இடம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.​ விசாரணை முடியும்வரை இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க இயலாது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *