சென்னை : ”தொலைதூர கல்வி முறையில் ஊனமுற்றோருக்கு இலவச கல்வி தரப்படும்,” என சென்னை பல்கலையின் துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
சென்னை பல்கலையின் வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வித்துறை சார்பில், பார்வையற்ற மாணவர்களுக்கு, ‘கம்ப்யூட்டரில்’ பிழையின்றி எழுதவும், படிக்கவும் பயிற்சி தரக்கூடிய, ‘இ-லேனிங்’ மையம் நேற்று துவங்கப்பட்டது.
துவக்க நிகழ்ச்சியில் துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற இன்று, ‘கம்ப்யூட்டர்’ அறிவு மிக அவசியம். இதை கருத்தில் கொண்டு, சென்னை பல்கலையில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கான, ‘இ-லேனிங்’ பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மையம் இயங்கும். இந்த ஆண்டு முதல், சென்னை பல்கலையின் ஆண்டு பொதுத் தேர்வில், பார்வையற்றோருக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல், சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும், தலா 10 ஊனமுற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல், தொலைதூர கல்வி முறையில் ஊனமுற்றோருக்கு இலவச கல்வி தரப்படும். 1995ம் ஆண்டின் ஊனமுற்றோர் நலச்சட்டம் குறித்த தகவல்களை, அனைத்து ஊனமுற்றோரும் அவசியம் அறிய வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.
ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் விஜயராஜகுமார் பேசும் போது, ‘ஊனமுற்றோருக்கு மருத்துவ உதவிகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலை தற்போது மாறியுள்ளது. கல்வியின் மூலம் அவர்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார். நிகழ்ச்சியில், பார்வையற்றோர் தேசிய நிறுவனத்தின் தலைவர் அறிவானந்தம், சென்னை பல்கலையின் வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வித்துறை தலைவர் கபாலி, மாநில கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் சகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply