கடலூர் : அதிகாரி கேட்டதாக, குறவர் ஒருவர் நரியை கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மாலை நரிக்குறவர் ஒருவர் வந்தார். தான் கொண்டு வந்த சாக்கு பையை பிரித்து அதில் மயங்கி கிடந்த நரிக்குட்டியை எடுத்து எதிரில் உள்ள டீ கடையில் தண்ணீர் மற்றும் பால் வாங்கி கொடுத்தார்.பின்னர் மீண்டும் நரியை பையில் போட்டு கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம் எதிரில் அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து விசாரிக்கையில் அவர் விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் (50) என்றும் நரிக்குறவர் சங்கத்தில் மாவட்ட செயலராக உள்ளதாகவும் தெரிவித்தார். தனது மகன்கள் வளர்த்து வரும் நரியை, இங்குள்ள (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தைக் காட்டி) அதிகாரி ஒருவர் விலைக்குக் கேட்டார். அதற்காக கொண்டு வந்ததாகவும், ஆனால் அந்த அதிகாரியை காணவில்லை எனக் கூறினார். நரியை விற்பதற்கு கொண்டு வந்த விவரம் தெரிந்ததும் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பானது. நரியை, நாய் போல் வீட்டில் வளர்ப்பதற்காக கேட்டார்களா அல்லது நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பதால் காலையில் எழுந்ததும் அதன் முகத்தில் விழிப்பதற்காக கேட்டார்களா என தெரியவில்லை. ஆனால் நரியை கேட்ட அதிகாரி உஷாராகி கடைசி வரை வெளியே தலை காட்டவில்லை.
Leave a Reply