சென்னை :’தனது விடுதலை தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை’ என உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி அனுப்பிய மனுவை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி, ஆலோசனைக் குழுவை முறைப்படி அமைக்கவும், நளினியின் கோரிக்கையை புதிதாக பரிசீலிக்கவும் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, அப்பீல் மனு தாக்கல் செய்தார். தனது விடுதலை தொடர்பாக, மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என உத்தரவிடக்கோரி, நளினி சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவில், நளினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தான் நேரில் ஆஜராவதாக ஐகோர்ட்டுக்கு நளினி தந்தி அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கு, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தபோது, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என, தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான அரசாணையையும் தாக்கல் செய்தது.
இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், ‘அரசாணையை அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்துள்ளார். எனவே, சுப்ரமணியசாமியின் மனு அவசியமற்றதால் அதை தள்ளுபடி செய்கிறோம். அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதால், தந்தியில் குறிப்பிட்டுள்ள நளினியின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய தேவையில்லை’ என கூறியுள்ளது.
நளினி சார்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், ‘ஆயுள் தண்டனைக் கைதிகள் 472 பேரை தமிழக அரசு விடுதலை செய்தது. நளினி மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரித்ததால், அவரது கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என தமிழக அரசு மறுத்தது.’பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோருவதற்கு நளினிக்கு உரிமையில்லை என தமிழக அரசு கூறியது. அரசமைப்பு சட்டப்படி, நளினி விடுதலையை பரிசீலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும் என்றோ, அதன் ஒப்புதல் பெற வேண்டும் என்றோ தேவையில்லை’ என வாதாடினார்.
இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதாடினார். நளினியின் அப்பீல் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல், ‘டிவிஷன் பெஞ்ச்’ தள்ளிவைத்துள்ளது.
Leave a Reply