புதுடில்லி : “நிகர்நிலைப் பல்கலைகளின் செயல் பாடுகள் குறித்து டாண்டன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை, இன்டர் நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
“நாடு முழுவதும் உள்ள நூற்றுக் கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைகளில், 44 பல்கலைகள், நிகர்நிலைப் பல்கலைக்குரிய அந்தஸ்தை பெற தகுதியற்றவை. இவற்றின் அங் கீகாரத்தை ரத்து செய்யலாம்’ என, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த, கடந்த ஜனவரியில் சுப்ரீம் கோர்ட் இடைக் கால தடை விதித்தது. இந்நிலையில், நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட கூடுதல் பதில் மனுவில், “இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்திய கமிட்டி, நிகர்நிலைப் பல்கலைகளின் கல்வித் தரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. “அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது தொடர்பான தகவல்கள், தங்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, சில பல்கலைகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது. “இது தொடர்பாக 130 நிகர்நிலைப் பல்கலைகளுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டு, நேரடியாக விவாதம் நடத் தப்பட்டது. இதில், 126 பல்கலைகள் பங்கேற்றன. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: நிகர்நிலைப் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்து, டாண்டன் கமிட்டி மற்றும் நடவடிக்கை குழு அளித்த பரிந்துரைகள் அனைத்தையும், மத்திய அரசு, இன்டர்நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பல்கலை அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். 44 நிகர்நிலைப் பல்கலைகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக் கால தடை, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Leave a Reply