சென்னை:நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை இழந்த, 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.தாண்டன் குழு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நாடு முழுவதும், 44 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து பல்கலைக் கழகங்கள் தொடர்ந்த வழக்கில், தற்போது இந்த பல்கலைக் கழகங்களில் படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், “ஸ்டேட்டஸ் கோ ஆன்டி’ அதாவது சம்பந்தப்பட்ட கல்வி மையங்கள், முன்பு எப்படி மாநில பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டதோ அந்த நிலைக்கு செல்ல வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த உத்தரவின்படி, அந்தஸ்தை இழந்த பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங் களுக்கு கீழ் செயல்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் முன்பு வழங்கிய தீர்ப்பில்,”பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளது.
தற்போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.தாண்டன் தலைமையிலான குழு, நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை இழந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட முடியாவிடில், அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றவும், அவர்கள் படிக்கும் அதே துறையில் படிக்கவும் தாண்டன் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிஎச்.டி., மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படிக்கும் மாணவர்களும், அவர்கள் படிப்பிற்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பெற வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களால் துவங்கப்பட்ட கிராக்கி இல்லாத படிப்புகளில், படித்து வரும் மாணவர்களுக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்யும் போது, அவர்கள் படிக்கும் அதே பிரிவு படிப்புகள் இல்லாத பட்சத்தில், அவர்கள் படிப்பிற்கு நிகரான வேறு பாடப் பிரிவில் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த மாற்று நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ள, பல்கலைக் கழக மானியக் குழு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியை தாண்டன் குழு நாடியுள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகே, மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட உள்ளன.
Leave a Reply