சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் [^]டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் [^] கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
11வது ஐந்தாண்டுத் திட்டம் விரைவில் நிறைவடையப் போகிறது. மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிற மக்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதே இந்த ஐந்தாண்டு திட்டக் காலங்களில் முக்கியமானது.
ஆனால், 6 கோடி மக்களில் மூன்றரை கோடி பேர் இன்னமும் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வேட்டி, ஒரு சேலை கூட வாங்க முடியாத நிலையில் வறுமையில் உள்ளனர் என்று தமிழக முதல்வரே கூறியுள்ளார்.
இந்த வறுமைக்கு, மது வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதுதான் காரணம். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மது வருமானம் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்களின் வருமானத்தைச் சுரண்டி, அரசு வருமானத்தை பெருக்குவது மக்கள் நல அரசின் இலக்கணமாக இருக்க முடியாது. படிப்படியாக மதுவிலக்கு என்ற கொள்கையை அறிவித்துள்ள அரசு, அதற்கான முயற்சியை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
வெறும் மாயஜாலம்-விஜயகாந்த் [^]:
தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த அண்டு நிதிநிலை அறிக்கையில் சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும், மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் மீது இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக தமிழகம் தான் 33 சதவீதம் வரி விதிக்கிறது. குறைந்தபட்சம் திமுக அரசு அதையாவது குறைத்து இருக்கலாம். ஒப்புக்காக சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் சில பொருட்களின் வரிகளை நீக்கியும், குறைத்தும் அறிவிப்புகள் வெளியிடுகின்றனர்.
62 லட்சம் பேர் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு அரசுத்துறையில் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் ஏற்கனவே தொகுப்பு ஊதியத்தில் உள்ளவர்கள். இந்த நிலையில் உண்மையில் வேலை கிடைக்க பெற்றவர்கள் சுமார் 1.5 லட்சம் பேர் தான்.
வறுமை ஒழிப்புக்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. கங்கை-காவிரி இணைப்பு திட்டம் பற்றியோ, காவிரி பிரச்சனை பற்றியோ, கச்சத்தீவில் படும் கஷ்டங்கள் பற்றியோ மூச்சு பேச்சு இல்லை.
வரியே போடாத வட மாநிலங்களுக்கு 13வது நிதிக் குழு 20 சதவீதம் நிதியுதவி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு 4.9 சதவீதம் தான். 13வது நிதிக்குழு இப்படி குறைத்திருப்பது தண்டனை போல தெரிவதால் வேதனை அளிக்கிறது என்று நிதியமைச்சர் கூறுகிறார்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு தந்துள்ள தண்டனை இது என்பதை திமுக ஒப்புக் கொள்ளுமா?.
மொத்தத்தில் இது போன்ற நிதிநிலை அறிக்கைகள் வரும், போகும். ஆனால் மக்கள் படும் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைப்பது எப்போது?. ஆண்டுதோறும் வரும் சடங்குகள் போல ஆகி விட்டது. ஏழைகளை பொருத்தவரை அவர்கள் என்றும் இலவு காத்த கிளிகள் தான்.
சில பொருள்களின் மீது வரிகளை நீக்கியும், குறைத்தும் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒரு மாயஜாலத்தைப் போல் உளளது. உண்மையில் விலைவாசி குறைந்தபாடில்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
Leave a Reply