சென்னை: மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததால், பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பருப்பு வகைகளின் விலை, கடந்த ஆண்டில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. துவரம் பருப்பு ஒரு கிலோ 100 ரூபாயை எட்டியது. தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்து, உள்நாட்டில் உற்பத்தியும் அதிகரித்த நிலையில், விலை குறையத் துவங்கியது.
பருப்பு வகைகளின் விலையை மேலும் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்தன. பிரதமர் மற்றும் அமைச்சர் சரத்பவார் ஆகியோர், உணவுப் பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டனர். இந்நிலையில், சமீபத்தில் பருப்பு வகைகளின் விலையில் கடும் மாற்றம் ஏற்பட்டது. துவரம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை முதல் ரகம் விலை 6,000லிருந்து 6,700 ரூபாயாக உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிலோ முதல்ரக துவரம் பருப்பு 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தான்சானியா துவரம் பருப்பு 5,200லிருந்து 5,900 ரூபாயாக உயர்ந்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் டர்கி ரக துவரம் பருப்பு, 4,200லிருந்து 4,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிலோ ஒன்றிற்கு ஐந்து முதல் ஏழு ரூபாய் வரையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று உளுந்து முதல்ரகம் 100 கிலோ கொண்ட மூட்டை 6,000லிருந்து 6,400 ரூபாயாகவும், பர்மா உளுந்து 5,200லிருந்து 5,600 ரூபாயாகவும், பாசிப்பருப்பு முதல் ரகம் 8,000லிருந்து 8,500 ரூபாயாகவும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பாசிப்பருப்பு 7,200லிருந்து 7,600 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பதுக்கலே காரணம் என வியாபாரிகள் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து மளிகைப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறும் போது, ”தான்சானியா, பர்மா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து துவரம் பருப்பு இறக்குமதி நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா தவிர மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருப்பு விளைச்சல் அதிகம் உள்ளது. ”தமிழகம் பருப்பு வகைகளுக்கு வட மாநிலங்களையே நம்பியுள்ள நிலையில், விளையும் பகுதிகளில் பண முதலைகள் லட்சக்கணக்கான மூட்டை பருப்பை பதுக்கியுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் பேச்சளவில் மட்டுமே உள்ளது; நடைமுறைக்கு வரவில்லை,” என்றார்.
Leave a Reply