இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண போலீசார் வெளியிட்ட விளம்பரத்தில், இந்தியாவின் பஞ்சாப் மாநில போலீசாரின் அடையாளச் சின்னம் (லோகோ) தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது.
இது, பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில், இந்தியாவில் இதுபோன்ற பிரச்னை எழுந்தது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பத்திரிகைகளில் முழுப் பக்கத்துக்கு ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்ட பிரபல இந்தியர்களின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.இதில், பாக்., முன்னாள் விமானப் படை தளபதி தன்வீர் முகமது அகமதுவின் புகைப்படமும் தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. இது, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக, மத்திய அரசு பின் வருத்தம் தெரிவித்தது. இதே போன்ற ஒரு பிரச்னை தற்போது பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்தை ஒடுக்க ஒத்துழைப்பு அளியுங்கள்’ என, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண போலீசார் சார்பில், பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தின் அடியில், பஞ்சாப் மாகாண போலீசார் என்று எழுதப்பட்டு, அதற்கு அருகில், இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநில போலீசாருக்கான, ‘லோகோ’ தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது.அந்த இடத்தில் பாகிஸ்தான், பஞ்சாப் மாகாண போலீசாரின், ‘லோகோ’ இடம் பெற்றிருக்க வேண்டும். இதை, பாகிஸ்தானில் உள்ள, ‘டிவி’ சேனல்கள், அடிக்கடி ஒளிபரப்பின. இது, பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.
பஞ்சாப் மாகாண ஐ.ஜி., தாரிக் ஜலீல் தோகார் கூறியதாவது:நாங்கள் பத்திரிகைக்கு அனுப்பிய விளம்பரத்தில் சரியான, ‘லோகோ’ தான் இடம் பெற்றிருந்தது. தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. பிரிவினைக்கு முன், பஞ்சாப் ஒரே மாகாணமாக இருந்தது. பிரிவினைக்கு பின், பாகிஸ்தான், பஞ்சாப் மாகாண போலீசாருக்கு தனி, ‘லோகோ’ உருவாக்கப்பட்டது.வரலாற்று ரீதியான இப்பிரச்னை மற்றும் குழப்பம் காரணமாகவே, தவறுதலான, ‘லோகோ’ விளம்பரத்தில் இடம் பெற்று விட்டது. இருந்தாலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.இவ்வாறு தாரிக் ஜலீல் தோகார் கூறினார்.
Leave a Reply