பால்வளத்துறை சார்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 10 ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் 5 குழந்தைகள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலிருந்து 16 பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகள் ஆகிய 31 குழந்தைகளுக்கு மடிக்கணினிகளை துணை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பரிசு பெற்ற பால் உற்பத்தியாளர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெவித்தனர். மடிக்கணினிகளை பெற்ற மாணவ- மாணவியர்களின் பெற்றோர்களும் இந்த திட்டம் குழந்தைகளின் கல்வித்திறனை மேலும் ஊக்குவிக்கும் என மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். இதுபோல் ஆவின் ஊழியர்களும், பால் உற்பத்தியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.
இந்தியத் தர நியம நிறுவனம் (பி.ஐ.எஸ்) சென்னை ஆவின் நிறுவனத்திற்கு சிறப்பான சுற்றுப்புறசூழல் மேலாண்மையை மேற்கொண்டு வருவதன் அடிப்படையில் உலகத்தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 14001: 2004 சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதை தென் பிராந்திய பி.ஐ.எஸ். நிறுவன துணை இயக்குநர் ஜெனரல் கே.அன்பரசு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஆவின் நிறுவனத்திற்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் முத்துக்குமாரசாமி, பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வ வர்மா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply