புவனேஸ்வர்: ஒலியை விட அதிக வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் நாசகர ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 290 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, செங்குத்தான நிலையில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., ரன்வீர் போர்க் கப்பலில் இருந்து காலை 11.30 மணி அளவில் இந்த ஏவுகணை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கடலில் நிறுத்தப்பட்டிருந்த, உபயோகத்தில் இல்லாத கப்பலை ஏவுகணை தாக்கியது. இதன் மூலம் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக, பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சிவதாணுப் பிள்ளை கூறினார்.
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்படும் 22வது பிரமோஸ் ஏவுகணை சோதனை இது. ஒலியை விட அதிக வேகமாக செல்லக் கூடிய இந்த ஏவுகணையை புதிதாக பயன்படுத்தப்படும் போர்க் கப்பல் தல்வார் தேவைக்கு ஏற்ப செங்குத்தாக சென்று தாக்கும் சோதனையை திறம்பட செலுத்துவதில் தேர்ச்சி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக, விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply