பிரிட்டன் மாணவர்களை விடஆங்கிலத்தில் இந்தியர் முன்னணி

posted in: உலகம் | 0

லண்டன்:’ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பிரிட்டன் மாணவர்களை விட இந்திய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்’ என்று பிரிட்டன் அரசின் அறிக்கை கூறுகின்றது.

சமீபத்தில் பிரிட்டன் அரசின், குழந்தைகள், பள்ளிகள் மற்றும் குடும்பங்களுக்கான துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் அனைத்திலும் பிரிட்டன் மாணவர்களை விட சீனர்கள், இந்தியர்கள், ஆப்ரிக்கர்கள் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளிக் கல்வியின் இறுதித் தேர்வுகளில், 55 சதவீதம் சீன மாணவர்களும், 31 சதவீதம் இந்திய மாணவர்களும் தேர்வு பெற்றதற்கான முதனிலையைக் குறிக்கும் ‘ஏ’ சான்றிதழ் பெறுகின்றனர். இதில், பிரிட்டன் மாணவர்களில் 16 சதவீதம், ஆப்ரிக்க மாணவர்களில் 14 சதவீதம், பாகிஸ்தான் மாணவர்களில் 13 சதவீதம், கரீபிய மாணவர்களில் 8 சதவீதம் பேர்கள்தான் அந்தச் சான்றிதழைப் பெறுகின்றனர்.ஆங்கிலத்தில் முதனிலைச் சான்றிதழை, 29 சதவீதம் சீனர்களும், 21 சதவீதம் இந்தியர்களும், 15 சதவீதம் பிரிட்டன் மாணவர்களும், 11 சதவீதம் ஆப்ரிக்கர்களும், 9 சதவீதம் பாகிஸ்தான் மாணவர்களும் பெறுகின்றனர்.அதேபோல, கணக்கு, புவியியல், வரலாறு, வேதியியல், உயிரியல், இயற்பியல், பிரெஞ்சு ஆகிய பாடங்களிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. ‘வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் என்ற விருப்பம்தான், பிரிட்டனில் குடியேறியவர்கள் முன்னணியில் இருப்பதற்குக் காரணம்’ என்று ஆய்வாளர் டெபொரா வில்சன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *