பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ‘லாகரிதம்’ குளறுபடி : மாணவர்கள் தவிப்பு

posted in: கல்வி | 0

கோவை : பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, கோவை தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தவறான விடை எழுதி மதிப்பெண்களை இழந்தனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று இயற்பியல் பாடத் தேர்வு நடந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில், 60வது கேள்விக்கு, “லாகரிதம்’ அட்டவணையை பயன்படுத்தி விடை எழுத வேண்டும். தேர்வறைக்குள் மாணவர்கள் தங்கள் சொந்த, “லாகரிதம்’ அட்டவணையை கொண்டு செல்ல தேர்வுத் துறை தடை விதித்துள்ளது. தேர்வு நடத்தும் மையங்களே, மாணவர்களுக்குத் தேவையான, “லாகரிதம்’ அட்டவணையை வழங்க வேண்டும் என்று தேர்வுப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேற்று, “லாகரிதம்’ அட்டவணை வழங்கப்பட்டது. கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, “லாகரிதம்’ அட்டவணையில் எண்கள் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால், அட்டவணையை பயன்படுத்தி விடை எழுதிய மாணவர்கள் தவறான விடை எழுதினர்.

இது பற்றி அப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் சிலர் கூறியதாவது: எங்களுக்கு பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேர்வு மையமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் தேர்வில் 60வது எண் கேள்விக்கு விடையளிக்க அப்பள்ளி அளித்த, “லாகரிதம்’ அட்டவணையை பயன்படுத்தினோம். கேள்வியின்படி, “0.00231′ என்ற இலக்கத்துக்கான, “லாகரித’ குறியீடு “3638’ஆக இருக்க வேண்டும். ஆனால், பள்ளி அளித்த அட்டவணையில், “3038′ என குறிப்பிடப்பட்டிருந்தது. “6′ க்குப் பதிலாக, “0′ என தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த குறியீட்டை பயன்படுத்தி விடை எழுதினோம். தேர்வு முடிந்து எங்கள் சொந்த, “லாகரிதம்’ அட்டவணையை பயன்படுத்தி கணக்கிட்டதில், பள்ளி அளித்த, “லாகரிதம்’ அட்டவணை தவறாக அச்சாகியுள்ளது தெரிந்தது.

இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்ததற்கு, “ஐந்து மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண்கள் தான் போகும்; பரவாயில்லை’ என பதிலளித்தனர். இயற்பியல் பாடத்தில் கணக்கிட கையாளும், “ஸ்டெப்ஸ்’ க்கு மூன்று மதிப்பெண்கள் வரை கிடைக்கும். பள்ளி வழங்கிய தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, மதிப்பெண்களை இழந்துள்ளோம். இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தொழிற்கல்வியில் சேர்வதற்கான, “கட்-ஆப்’ மதிப்பெண் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி செய்த தவறால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்று, கேள்வி எண் 60க்கான முழு மதிப்பெண்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *