புதிய சட்டசபை கட்டிடம் நாளை திறப்பு: பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா வருகை; கருணாநிதி தலைமையில் கோலாகல விழா

posted in: மற்றவை | 0

6a9b3e70-d5b3-47e6-8183-8ec7b936e70f_s_secvpfசென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

பிரமாண்டமாக அமைந்துள்ள புதிய சட்டசபை தலைமைச் செயலக வளாகம் முதல்- அமைச்சர் கருணாநிதியின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சட்டசபை கட்டிடத்துக்கு ஆரம்பத்தில் ரூ.425.57 கோடி ஒதுக்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பாக கட்டுவதற்காக செலவு ஒதுக்கீடு ரூ.450 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 6 தளங்கள் கொண்ட புதிய சட்டசபை கட்டிடம் 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் இதயமான அண்ணா சாலையில் பிரமாண்டமாய் எழுந்துள்ள புதிய சட்டசபை கட்டிடம் சென்னை நகருக்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. இந்தியாவிலேயே இயற்கை வனப்புமிக்க மிகப்பெரிய கட்டிடமாகவும் உருவாகி இருக்கிறது.

இதன் இருபுறமும் உள்ள சிவானந்தா சாலை, வாலாஜா சாலை ஆகியவை விரிவுப்படுத்தி அழகுபடுத்தப்பட்டுள்ளன. 4 வட்டங்கள் கொண்ட இந்த கட்டிடத்தின் முதல் மற்றும் 2-ம் வட்டத்தின் மேல் தளத்தில் பசுமையான தோட்டமும், கூரையின் மேல் புல்வெளி மற்றும் செடிகள் அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான காற்று, ஒளி அதிக அளவில் கட்டிடத்துக்குள் ஊடுருவும் வகையில் அமைந்துள்ள 100 அடி உயர பிரமாண்ட கோபுர கூரை இதன் சிறப்பு அம்சமாகும்.

12.11.2008-ல் இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கின. 2010-2011-ம் ஆண்டு பட்ஜெட் புதிய சட்டசபை கட்டிடத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அவர் தினந்தோறும் நேரில் சென்று பணிகளை துரிதப்படுத்தினார். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இரவு பகலாக பணிபுரிந்து இந்த சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் எழில்மிகு கட்டிடமாக அமைந்துள்ள புதிய சட்டசபை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், புதிய சட்டசபை தலைமைச் செயலக வளாகத்தை திறந்து வைக்கிறார்.

விழாவில் அமைச்சர் அன்பழகன், துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், அரசு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவையொட்டி பழைய, புதிய சட்டசபை, தலைமை செயலக கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரசினர் தோட்ட வளாகமும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விழாவுக்காக அலங்கார மேடை 40 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரம் பேர் உட்கார்ந்து விழாவை நேரில் காணும் வகையில் 100 அடி நீள பந்தல் போடப்பட்டுள்ளது.

விழா நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு மகிழ, பிரமாண்ட டி.வி.க்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுகிறது. விழாவுக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டசபை திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் தமிழ்செல்வன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து ஐ.ஜி.ராஜேஷ் சந்திரா தலைமையில் 50 பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் விழா மேடையை சுற்றியுள்ள பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சட்டசபை கட்டிடம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்தை சுற்றிலும், 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்களும், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லி பாதுகாப்பு படை, கமாண்டோ படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் போலீசார் என மொத்தம் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் விழா அரங்குக்கு வரும்போது பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இன்று காலையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோர் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்வதற்காக குண்டு துளைக்காத கார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டசபை கட்டிடமும், விழா நடைபெறும் அரங்கமும் போலீஸ் அதிகாரிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டசபை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள், மாலை 4.30 மணிக்குள் விழா அரங்கிற்கு வந்து தங்களது இருக்கைகளில் அமர வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விழா முடிந்த பின்னர் முக்கிய பிரமுகர்கள் புறப்பட்டு சென்ற பிறகு 15 நிமிடங்கள் கழித்து விழா அரங்கை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *