பென்னாகரம்:”பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகள் பணத்தை நம்பியுள்ளது; ஒரு கட்சி இனத்தை நம்பியிருக்கிறது; நான் ஜனத்தை நம்பியுள்ளேன்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
பென்னாரகம் தொகுதிக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் நேற்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வேட்பாளர் காவேரிவர்மனுக்கு ஆதரவாக மக்களிடையே ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:தமிழக பட்ஜெட் வரி இல்லாத பட்ஜெட் என, கூறுகின்றனர்; போன வருடமும் இதையே தான் கூறினர். ஆனால், விலைவாசி தான் குறையாமல் உள்ளது. இடைத்தேர்தல் நடக்கும்போது பட்ஜெட் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது தவறு. பென்னாகரத்ததை பொறுத்தமட்டில் அ.தி.மு.க.,- பா.ம.க.,- தி.மு.க., என, மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளனர்.
இந்த தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளனர். பலர் பிழைப்புக்காக வெளியூர் செல்கின்றனர். மத்தியில் அங்கம் வகித்த பா.ம.க., அமைச்சர்கள் வேலு, அன்புமணி ஆகியோர் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருப்பார்கள். புதுசா வந்திருக்கான், இவன் என்ன செய்து விடுவான் என, என்னை கேட்கின்றனர். நான் மக்கள் சேவை செய்ய வந்துள்ளேன். 11 இடைத்தேர்தல்களையும் இடைவிடாமல் சந்தித்து வருகிறேன். மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவேன். என்றாவது ஒரு நாள் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்.நான்கு ஆண்டுகள் இல்லாமல் இப்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றப்போவதாக கூறுகின்றனர்.
1998ல் ஆரம்பிக்கப்பட்டது. 2002ல் ஆரம்பித்த கர்நாடக அரசு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி விட்டது. 2012 ஆனாலும் இந்த அரசு நிறைவேற்றாது. பா.ம.க.,வினர் ஜாதி ஜாதி என கூறுகின்றனர், மாநில தலைவர் மணி, திருச்சிக்கு சென்று கும்பிடு போடுகிறார், சட்டசபையில் முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சிரித்துக் கொள்கின்றனர். யாரை ஏமாற்றுவதற்காக இப்படி நடிக்கிறார்கள்.பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகள் பணத்தை நம்பியுள்ளது; ஒரு கட்சி இனத்தை நம்பியிருக்கிறது; நான் ஜனத்தை நம்பியுள்ளேன். நான் நினைத்திருந்தால் பெட்டி பெட்டியாக வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம், என்னுடைய கூட்டணி எப்போதும் மக்களோடு தான். மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்கள், இந்த தேர்தலில் எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க.,வை விமர்சிக்காத விஜயகாந்த்: பென்னாகரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தி.மு.க.,- பா.ம.க., இரு கட்சிகளையும் ஒரு பிடி பிடித்தார். ஆனால், அ.தி.மு.க.,வைப் பற்றி அதிகமாக பேசவில்லை. பழையூர் கிராமத்தில் பேசும்போது, ‘அ.தி.மு.க., ஆட்சியிலும் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை’ என்று ஒரு வரியோடு நிறுத்திக் கொண்டார்.
பிரச்சாரத்தின் போது காத்திருந்த கலெக்டர் : பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலை அருகே தேர்தல் ஆய்வு மேற்கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் அமுதா வந்தார். அப்போது அங்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசியதால் அந்த பகுதியில் வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. கலெக்டரும் காரிலேயே அமர்ந்திருந்தார். வாகனங்கள் அனைத்தும் சென்ற பின்னரே அவர் புறப்பட்டு சென்றார். அதேபோல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சட்டசபை துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் ஆகியோர் பிரச்சாரம் செய்ய முடியாமல் காத்திருந்தனர்.
சாலையோரம் பயங்கர தீ :பெரும்பாலை அடுத்த சாணாரப்பட்டியில் ரோட்டோரம் இருந்த புல், புதர், பூண்டுகள், பனை மரம் ஆகியவை திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த வழியாக விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வந்து கொண்டிருந்தார். கொளுந்து விட்டு தீ எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தீயின் வெப்பம் ரோட்டில் சென்றவர்களை தாக்கும் அளவுக்கு உயர்ந்து எரிந்தது. பனை மரம் ஒன்று முழுவதுமாக எரிந்து சாம்பலானது. ‘தானாக தீப்பற்றி எரிவதற்கு வாய்ப்பில்லை, விஷமிகள் யாரோ வேண்டுமென்றே தீ வைத்துள்ளனர்’ என, தே.மு.தி.க., தொண்டர்கள் குமுறினர்.
Leave a Reply