பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரு மகள்களையும் அழைத்து திமுகவுக்காக பிரசாரம் செய்ய வைக்க திமுக தரப்பில் கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம்.
பென்னாகரம் இடைத் தேர்தல் களம், படு சூடாகி வருகிறது. திமுகவும், பாமகவும் கடுமையாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. அதிமுக தரப்போ ஆளவரவமின்றி அமைதியாக காணப்படுகிறது. தேமுதிக இருக்கும் இடமே தெரியவில்லை.
மார்ச் 3ம் தேதி இங்கு வேட்ப மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் திமுகவும், பாமகவும் ஏற்கனவே பல்வேறு பூர்வாங்கப் பணிகளை முடித்து விட்டு தீவிரப் பிரசாரத்திற்குக் காத்துள்ளன.
இந்த நிலையில் திமுக தரப்பில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரு மகள்களையும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறதாம்.
சில மாதங்களுக்கு முன்பு வீரப்பனின் மகள்களான வித்யா ராணி, பிரபா விஜயலட்சுமி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்களது தாயாரை விடுதலை செய்ய உதவுமாறும், தங்களுக்கு உதவிகள் கோரியும் விண்ணப்பம் கொடுத்தனர்.
இவர்களின் தாயாரான முத்துலட்சுமி தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீரப்பனை அதிரடிப்படை சுட்டு வீழ்த்திய பின், கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, பென்னாகரம் சட்டசபை தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டார்.
மலைவாழ் மக்கள் அமைப்பினர், அவரது ஜாதியைச் சேர்ந்த சிலரது ஆதரவு [^]டன் களம் இறங்கிய முத்துலட்சுமியுடன், அவரது மகள்கள் வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.
முத்துலட்சுமி ஆதரவை பெற ஆரம்பத்தில் இருந்து பா.ம.க. முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. அந்தத் தேர்தலில் முத்துலட்சுமி 9,868 ஓட்டுகளை பெற்றார்.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக முத்துலட்சுமியின் மகள்கள் வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
எனவே ஜெகத்ரட்சகன் உதவியுடன், பென்னாகரம் தொகுதியில் உள்ள முத்துலட்சுமியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஓட்டுகளை பெற தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
ஒகேனக்கல் காவிரிப் படுகை வனப்பகுதிக்கு முக்கிய இடம் உண்டு. வீரப்பனின் சொந்த ஊர் காவிரிப் படுகையில் உள்ள கோபிநத்தம் செங்கம்பாடி.
பென்னாகரம், மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட பல மலைக் கிராமங்களில், சந்தனக் கடத்தல் வீரப்பன் கால் பதிக்காத இடமே இல்லை. வீரப்பன் ஆதரவாளர்களும், உறவினர்களும் பென்னாகரம் தொகுதியில் அதிகம் உள்ளனர்.
அட்டப்பள்ளம், அம்மாசி சந்து, சத்தியமங்கலம் காடுகளில் பல நூறு கிலோ மீட்டர் தூரம் வீரப்பன் ஆதிக்கம் இருந்தது.
மேலும் வீரப்பன் உறவினர்கள், அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ள ஏரியூர், நெருப்பூர், பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதியில் கூடுதல் ஓட்டு பெற முடியும் என்று தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
எனவே தேர்தல் பிரசாரத்தின் கடைசிக் கட்டத்தில் வீரப்பன் மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு இப்பகுதிகளில் வீடு வீடாக ஏறி இறங்கி திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க திமுக தரப்பு திட்டமிட்டு வருகிறதாம்.
Leave a Reply