சென்னை : பொதுக்கூட்டங்கள், கோவில் விழாக்களின் போது மின்சார இணைப்பை சட்டப்படி பெறுகிறார்களா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மின் திருட்டு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கோவில் விழாக்களுக்கும், பொது கூட்டங்களுக்கும் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து சிலர் பணம் வசூலிக்கின்றனர். விழாக்களின் போது, ஏராளமான டியூப் லைட்டுகள், சீரியல் விளக்குகள், மைக் செட்டுகள், பயன்படுத்துகின்றனர். இதற்காக, ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். மின் திருட்டு பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படுகிறது. இந்த மின் திருட்டை தடுக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, மின் திருட்டை தடுக்க இத்தகைய விழாக்கள், பொது கூட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார். மனுவை நீதிபதிகள் தர்மாராவ், பால்வசந்தகுமார் அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராஜேந்திரன், அரசு சார்பில் அசன் பைசல், மின்வாரியம் சார்பில் வக்கீல் ஆ.செல்வேந்திரன் ஆஜராகினர்.
“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மின்வாரிய தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “கூட்டங்கள், ஊர்வலங்கள், விழாக்கள் நடத்த போலீசார் அனுமதியளிக்கும் போது, சட்டப்பூர்வமான வழிகளில் மின்சாரம் பயன்படுத்த விழா ஏற்பட்டாளர்கள் அனுமதி பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை போலீசாருக்கு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய உத்தேசித்துள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது. மின்வாரியம் கூறியுள்ள இந்த பரிந்துரையை இன்னும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றால், நான்கு வாரங்களில் அதை அமல்படுத்தலாம். மின்வாரியத்தின் பதில் மனுவினால், மனுதாரர் கோரிய நிவாரணத்தில் திருப்தியடையலாம். பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், விழாக்களுக்கு அனுமதியளிக்கும் போது, மின்வாரியம் தெரிவித்த பரிந்துரைகளை போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். மின் திருட்டு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply