பொருளாதாரத்தை நெருக்கடிக்கு தள்ளியது பட்ஜெட் : அரசு மீது எம்.பி.,க்கள் புகார்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_43450564147புதுடில்லி : “அதிகரிக்கும் பணவீக்கம், உள்நாட்டு சேமிப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை மன்மோகன் சிங் அரசு புறக்கணித்து விட்டது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளி விட்டது.

இதனால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைவது என்பது நடக்க முடியாது ஒன்று’ என, லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. இதேபோல, மற்ற பல கட்சிகளின் எம்.பி.,க்களும் புகார் தெரிவித்தனர்.
பொது பட்ஜெட் மீதான விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. இந்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா மேலும் கூறியதாவது: பணவீக்கத்தை குறைக்க வேண்டும். அதன் பின்னரே, சந்தையில் வட்டி வீதம் குறையும். நுகர்வோர் அடிப்படையிலான வளர்ச்சிப் பாதையை நோக்கி அரசு போய்க் கொண்டிருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி விடும். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. உள்கட்டமைப்பிற்காக 1.73 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இது மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 46 சதவீதம்.
ஆனால், இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால், சாதாரண மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைள், எண்ணெய் வித்துக்கள், இரும்பு, உரம், சிமென்ட் மற்றும் நிலக்கரி போன்றவற்றின் விலைகள் இந்த ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளன. உணவு தானிய கிடங்குகளில் உணவு தானியங்கள் நிரம்பி வழிகின்றன என்று அரசு கூறுகிறது. ஆனால், இவை சந்தையை சென்றடையவில்லை. இதன்மூலம் செயற்கையான பற்றாக்குறை உருவாக்கப்பட்டுள்ளது அல்லவா. இவ்வாறு சின்கா கூறினார்.
இதன்பின் கட்சித் தலைவர்கள் பேசியதாவது: பாலிராம் -பகுஜன் சமாஜ்: மத்திய பட்ஜெட்டில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். முதலாளிகளின் உத்தரவின் பேரில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கருணாகரன் -மார்க்சிஸ்ட் கம்யூ: பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் எடுத்துள்ள பிற்போக்கான நடவடிக்கைகளை கண்டு, ஆளும் கட்சியினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலமான பொருளாதார பின்னணியை உருவாக்க அரசு விரும்புகிறது. அதை ஆதரிக்கிறோம். ஆனால், வரி செலுத்தும் ஏழை மக்களை பாதிக்க வைத்து இதைச் செய்யக் கூடாது.
மகதாப் -பிஜூ ஜனதா தளம்: மனிதவள குறியீடு பற்றி பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனந்த் ராவ் அத்சூல் -சிவசேனா: டீசல், பெட்ரோல் விலையை உயர்த்த அனுமதித்ததன் மூலம், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் சமூகத்திற்கு நிவாரணம் அளிக்க பாசன வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும். நகர்ப்புற ஏழ்மையை ஒழிக்கவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லால்ஜி டாண்டன் -பா.ஜ: ஆய்வு செய்யவோ அல்லது விமர்சிக்கவோ பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை. மக்கள் விரும்புவது உணவு, வீடு, வேலையே. வெற்று வாக்குறுதிகளை அல்ல. வேலை உத்தரவாத திட்டத்தில் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
கிரிஜா வியாஸ் – காங்கிரஸ்: பட்ஜெட் தயாரிக்கும் முன், நிபுணர்களையும், பல்வேறு தரப்பினரையும் நிதி அமைச்சர் கலந்து ஆலோசித்துள்ளார். ஏழைகள், சாதாரண மக்கள் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *