டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் மகளிர் தலைமைத்துவ மாநாடு இன்று விஞ்ஞான் பவனில் நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பெண்களை சமூக, பொருளாதார, அரசியல் சக்தியாக மாற்றுவதில் அரசு உறுதியுடன் உள்ளது. இதற்காக என்ன வகையான நடவடிக்கை தேவைப்படுமோ அதை எடுக்க அரசு தயாராக உள்ளது.
மகளிருக்கான இட ஒதுக்கீடும் அந்த வகையில் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு உறுதியுடன் உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்களில் ஏற்கனவே அடிமட்ட அளவிலிருந்து பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதுத. இது பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் மாற்றம், உயர் மட்ட அளவிலும் பரவ வேண்டும். அப்போதுதான் பெண்கள் முழுமையான அதிகாரத்தைப் பெற முடியும் என்றார் பிரதமர்.
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply