சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த மாதம் 27-ந்தேதி பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.71, டீசல் லிட்டருக்கு ரூ.2.55 என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சிறிதளவு உயர்த்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த தடவை விலை உயர்வுக்கு கச்சா எண்ணை விலை உயர்வு காரணம் அல்ல. பெட்ரோல், டீசல் தரம் யூரோ 3 என்ற நிலையில் இருந்து யூரோ-4 என்ற நிலைக்கு தரம் உயர்த்தப்படுவதே காரணமாகும்.
தற்போது இந்தியா முழுவதும் யூரோ-3 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் என்பது யூரோ-3 ரக பெட்ரோல், டீசலை விட அதிகம் சுத்திகரிக்கப்பட்டதாகும்.
யூரோ-3 ரக பெட்ரோல், டீசலில் சல்பர் மூலப் பொருட்களின் சேர்க்கை அதிக அளவில் இருக்கும். குறிப்பாக 10 லட்சம் சல்பரில் 350 என்ற அளவுக்கு சல்பர் மூலப் பொருட்கள் இருக்கும். இதனால் யூரோ-3 ரக பெட்ரோல், டீசல் பயன் படுத்தும் வாகனங்கள் அதிக புகையை வெளியிடும்.
யூரோ-3 ரக பெட்ரோல், டீசல் காரணமாக சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. காற்று அதிக அளவில் மாசுபடுவதாக கூறப்பட்டது. இதை தடுக்க வேண்டுமானால் நன்கு சுத்திகரிக்கப்பட்ட யூரோ-4 ரக பெட்ரோல், டீசலை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேத்தா என்பவர் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் இந்தியாவில் யூரோ-4ரக பெட்ரோல், டீசலை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை ஏற்றுக்கொண்ட பெட் ரோலியம் அமைச்சகம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் யூரோ-4 ரக பெட்ரோல், டீசலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தது.
அதன்படி டெல்லியில் நாளை (புதன்) முதல் யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் விற் பனை தொடங்குகிறது.முதல் கட்டமாக சென்னை உள்பட 13 நகரங்களில் வரும் 1-ந் தேதி முதல் யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் அறிமுகமாகிறது. யூரோ-4 ரக பெட்ரோல், டீசலில் சல்பர் மூலப் பொருட்களின் சேர்க்கை மிக மிகச் குறைவாக இருக்கும் இதன் காரணமாக அதிக புகை வராது. சுற்றுச் சூழலும் கெடாது.
இந்த யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் சுத்திகரிப்புக்காக நாடெங்கும் உள்ள எண்ணை நிறுவனங்களில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சீரமைப்புப் பணிகளுக்கு மாநில எண்ணை நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளன.
யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் சுத்திரிப்புக்காக எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து செலவழிக்க வேண்டியுள்ளதாகத் தெரிகி றது. எனவே தங்கள் இழப்பை சரி கட்ட பெட்ரோல், டீசல் விலையை சற்று உயர்த்த எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு குறைந்த பட்சம் 40 பைசா அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இதில் 20 பைசா எண்ணை நிறுவனங்களுக்கும், 20 பைசா டீலர்களுக்கும் கிடைக்கும். இந்த விலை உயர்வு ஏப்ரல்-1ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இதற்கிடையே சமையல் கியாஸ் விலை கணிசமாக உயரும் என்று தெரிகிறது. சமையல் கியாஸ் விலை ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களின் பரிந்துரைக்கு ஏற்ப கடைசி யாக கடந்த 2005ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த நிறுவனங்கள், சமையல் கியாஸ் விலையை 30 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன. அதை மத்திய அரசு ஏற்றுள்ளது.
இது குறித்து பெட்ரோ லியம் அமைச்சக செயலாளர் எஸ்.சுந்தரேசன் நிருபர்களிடம் கூறுகையில், சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது குறித்து அரசு இறுதி கட்ட முடிவு எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. விரைவில் மத்திய அரசு இதில் ஒரு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
Leave a Reply