புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இது அரசியல் வட்டா ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டது. குறிப்பாக, தலைமை நீதிபதியை தகவல் அறியும் உரிமை சட்டம் கட்டுப்படுத்தாது, அரசின் கொள்கை முடிவுகளை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்பது உள்ளிட்ட விஷயங்களில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.
இதற்கு காங்., தலைவர் சோனியா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக, இரண்டு மாதங்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சோனியா எழுதிய கடிதத்தில்,”அரசு சாரா அமைப்புகள் போன்றவை, இதில் திருத்தம் செய்வதை விரும்பவில்லை. எனவே, தற்போதுள்ள சட்டமே தொடர வேண்டும்’ என, தெரிவித்திருந்தார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங், தற்போது பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார். அதில்,”தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதே நேரத்தில், திருத்தம் செய்வதற்கு முன், இதுகுறித்து சம்பந்தப்பட்டோரிடம் ஆலோசனை நடத்தப்படும்’ என, தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமருக்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply