மருத்துவத்தில் எடுபடாதுமாயாஜாலம் : பாய்கிறது தடைச்சட்டம்

posted in: மற்றவை | 0

tblfpnnews_63596743346கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டு, அப்பாவி நோயாளிகளிடம் பணம் அபகரிக்கும் “போலி டாக்டர்கள்’ மீதான பிடியை, தமிழக அரசு இறுக்கியுள்ளது; மோசடி நபர்களை “மாயாஜால மருத்துவ சிகிச்சைகள் தடைச்சட்டத்தின்படி’ கைது செய்ய, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் புற்றீசல் போல பரவி, கிளினிக் துவக்கியுள்ளனர். “எய்ட்ஸ் நோயாளியை 100 நாட்களில் குணப்படுத்துகிறோம்’ “இதய ரத்தநாள அடைப்பை அறுவைச் சிகிச்சை இல்லாமல், மருந்தினாலேயே சரி செய்கிறோம்’ “குழந்தையற்ற தம்பதியின் வாரிசு கனவை, ஆறே மாதத்தில் நனவாக்குகிறோம்’ “பிறவி ஊமையை பேச வைக்கிறோம்’ என்றெல்லாம், மருத்துவம் சார்ந்த விளம்பரங்களை வெளியிடுகின்றனர். பள்ளி இறுதி வகுப்பை கூட தாண்டாத நபர்களும், “டாக்டர்’ கெட்டப்பில் சில “டிவி’ சேனல்களில் தோன்றி, மணிக்கணக்கில் “வாயளந்து’ மக்களை நம்பச் செய்கின்றனர். தங்களை நாடி வரும் அப்பாவிகளிடம், அதிகளவில் பணம் கறந்து நம்பிக்கை மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இந்நபர்களிடம் பணம் இழந்தவர்கள், “யாரிடம் போய் புகார் அளிப்பது?’ எனத்தெரியாமல் குழப் பத்தில் புலம்பி வருகின்றனர்.

கண்காணிக்க உத்தரவு: மருத்துவ மோசடி புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, மாநில அரசு உஷாரடைந்திருக்கிறது. “டாக்டர்’ என்ற பெயரில் தடாலடி விளம்பரங்களை வெளியிடும் போலி டாக்டர் குறித்த விபரங்களை மாநிலம் முழுவதும் ரகசியமாக திரட்டி வருகிறது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:எளிதில் நம்பமுடியாத, நடைமுறையில் சாத்தியமற்றதாக கருதப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விளம்பரங்களை கொடுப்போரை தீவிரமாக கண்காணிக்கிறோம். சில மாதங்களுக்கு முன் சென்னையில் “மான் தோல் வைத்தியர்’ மருத்துவ மோசடி, பண மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கோவைப்புதூரிலும் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பள்ளி படிப்பை படித்து விட்டு பலருக்கும் வைத்தியம் பார்த்தது விசாரணைக்கு பின் தெரியவந்தது. இது போன்ற மருத்துவ மோசடிகள் தொடராமலிருக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். மோசடி தொடர்பான ஆவண ஆதாரங்களை திரட்டிய பின் “மாயாஜால மருத்துவ சிகிச்சைகள் தடைச் சட்டத்தின்படி’ கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பொது எச்சரிக்கை அறிவிப்புகள், வெகுஜன தொடர்பு சாதனங்கள் வழியாக, அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“குடி’ மறக்க சிகிச்சை: போலி டாக்டர் கைது : “குடி’யை மறக்க சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து, பண வசூலில் ஈடுபட்ட போலி டாக்டரை கோவை போலீசார் கைது செய்தனர்.கோவை, காந்திபுரம், எட்டாவது வீதியில் “ராஜகுரு வைத்திய சாலை’ நடத்துபவர் பாண்டிக்குமார்(43); தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர். மது பழக்கத்தை ஒரே நாளில் மறக்கச் செய்யும் வகையில் சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்தார். சிகிச்சை பெற வந்தோரிடம் தலா 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. எனினும், சிகிச்சை பெற்ற நபர்களால் மது பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை. இது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தது. ரகசிய விசாரணை நடத்த, நுண்ணறிவுப்பிரிவுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர், ராஜகுரு வைத்திய சாலையில் திடீர் சோதனை நடத்தி விசாரித்தனர். மதுவில் மூன்று விதமான பவுடரை கலக்கி, சிகிச்சை பெற வருவோரை குடிக்க வைத்தது தெரியவந்தது. இங்கு சிகிச்சை பெற்ற நபர்களிடம் போலீசார் விசாரித்ததில், மருத்துவ மோசடி நடந்திருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, போலி டாக்டர் பாண்டிகுமாரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *