சென்னை, மார்ச் 15: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை பேசியதாவது:
÷கல்விக் கடன் என்பது எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடு. வறுமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றும், பண வசதி இல்லாத காரணத்தால் உயர் கல்வியை தொடர முடியாத நிலை இன்றும் உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவதில் சீரான சட்ட திட்டங்கள் இல்லை. கடன் வாங்க முயலும் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மத்திய ரிசர்வ் வங்கியும், இந்திய வங்கிகள் சங்கமும் பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன. எனினும், பெரும்பாலான வங்கிகள் அவற்றை மதிப்பதில்லை.
÷வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக ரூ.4 லட்சத்துக்கும் குறைவான கடனுக்கு கூட சொத்துப் பத்திரங்களை அடமானமாகக் கேட்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்த வேண்டும்; குறைந்தபட்ச தொகையை கடன்தாரர்கள் முன்னதாகவே செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது.
÷இதனால் பல மாணவர்கள் கல்வி கற்பதை கைவிடுகின்றனர். இவையெல்லாம் தெரிந்தும் வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் மறுத்து வருகின்றன.
÷மாணவர்களுக்கு கல்வி அளித்து, முன்னேற்றுவது அரசின் முக்கிய கடமையாகும். அதிலும், உயர் கல்வி அளிப்பது என்பது மனித வள மேம்பாட்டுக்கான தேசிய முதலீடு ஆகும். எனவே, உயர் கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் வட்டியின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் அதிகமாக கல்விக் கடன் வழங்க அரசு ஆணையிட வேண்டும் என்று டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.
Leave a Reply