லக்னோ:பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழாவின் போது, மாயாவதிக்கு அணிவிக்கப் பட்ட பிரமாண்ட மாலையில், 22.5 கோடி ரூபாய் இருந்ததாக, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள், சமீபத்தில் லக்னோவில் நடந்தன. இதில், கட்சித் தலைவரும், உ.பி., முதல்வருமான மாயாவதிக்கு, அவரது கட்சியினர், 1,000 ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்தனர்.
இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பொதுமக்களின் வரிப் பணம் என, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.இந்த மாலையை உருவாக்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது; அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுருட்டி, மடக்கி, அடுக்கி வைத்து, இந்த பிரமாண்ட மாலை தயாரிக்கப்பட்டிருந்தது. அப்படியானால், இந்த மாலையில் எத்தனை ரூபாய் இருந்தது என்பது குறித்து, வெவ்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒரு சிலர் கோடிக்கணக்கான பணம் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என, தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியதாவது:முழுக்க முழுக்க 1,000 ரூபாய் நோட்டுகளால் மட்டுமே, இந்த மாலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாலையின் ஒவ்வொரு செ.மீட்டரிலும், ரூபாய் நோட்டுகளாலான ஐந்து வளையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வளையத்திற்கும் 45 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி பார்த்தால், ஒவ்வொரு வளையத்துக்கும் 45 ஆயிரம் ரூபாய் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மாலையின் மொத்த நீளம் 1,000 செ.மீட்டர். இதன்படி, 1,000 செ.மீட்டருக்கு, 22.5 கோடி ரூபாய் இருந்திருக்கும் என்பது என் கணிப்பு.இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
Leave a Reply