திருநெல்வேலி:முஸ்லிம்களுக்காக தி.மு.க., பல்வேறு பணிகளை செய்துள்ளது என மத்திய அமைச்சர் அழகிரி பேசினார்.நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மறுமலர்ச்சி மாநாடு நடந்தது.
கட்சியின் தேசிய பொதுச் செயலர் கே.எம்.காதர் மைதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் முகமது அபுபக்கர், வேலூர் எம்.பி., அப்துல் ரஹ்மான், மாநில மகளிர் அணி தலைவி பாத்திமா முஸப்பர், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான், தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கீழக்கரை செய்யது அப்துல் காதருக்கு சிறந்த கல்வியாளர், முகமது ஷாபிக்கு சிறந்த சேவையாளர், அப்துல் ரஹ்மானுக்கு சிறந்த இலக்கியவாதி உள்ளிட்ட விருதுகளை வழங்கி, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது: இஸ்லாமியர்களுக்காக தி.மு.க., பல்வேறு பணிகளை செய்துள்ளது. 1947 முதல் 62 வரையிலும் தமிழக அமைச்சர்களில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.
அண்ணாதுரை கேட்டுக்கொண்ட பின், 62ல் காங்., அரசில் மஜீத் அமைச்சரானார். திருச்சி ஜானிபாயை மேலவை உறுப்பினராக்கினோம். அப்துல் சமதுவை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினோம்.மதுரையில் கவுஸ் பாட்ஷாவை துணைமேயர், எம்.எல்.ஏ., ஆக்கினோம். ரஹ்மான்கானை சிறுசேமிப்பு தலைவராகவும், ராமநாதபுரம் எம்.ஏ.காதரை ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆக்கினோம். டி.பி.எம்., மைதீன்கானை அமைச்சராக்கியுள்ளோம்.
சல்மாவுக்கு நலவாரிய பொறுப்பு தந்தோம். 1969ல் இருந்து மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அளித்தோம். 1974ல் சென்னை மகளிர் கல்லூரிக்கு காயிதேமில்லத் பெயர் சூட்டினோம். 1989ல் சிறுபான்மை நலவாரியம் ஏற்படுத்தினோம். வக்பு வாரியத்திற்கு கட்டடம், பராமரிப்பு செலவுகள் வழங்கினோம். 1800 பேர்தான் குலுக்கல் முறையில் ஹஜ் போகலாம் என்றிருந்ததை மாற்றி, விண்ணப்பித்த அனைவருக்கும் பயண அனுமதி வழங்கினோம். 2000ல் உருது அகடமி, 2001ல் காயிதேமில்லத் மணிமண்டபம், 2008ல் எட்டயபுரத்தில் உமறு புலவருக்கு மணிமண்டபம் என பல்வேறு பணிகளை செய்துள்ளோம். இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
மாநாட்டில், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை ஏற்று கல்வி, மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது <உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Reply