புதுடில்லி : “”ஊழல் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை என்பதை முழுமையாகவும், திறமையாகவும் அமல்படுத்த வேண்டும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்,” என, மத்திய அரசின் கேபினட் செயலர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைச் செயலர்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய கேபினட் செயலர் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஊழல் முழுமையாகவும், உறுதியாகவும் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஊழல் நடப்பதை தடுப்பதற்கான கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.முடிவு எடுக்கும் விவகாரங்களில், ஒளிவு மறைவற்ற தன்மை நிலவ வேண்டும். குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடர வேண்டும்.சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களின் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். அவர்களுக்கு உரிய மதிப்பை பேணிக்காக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். நல்ல நிர்வாகத்தை தரும் வகையில், சிவில் சர்வீஸ் அதிகாரிகள் முழு மனதுடன் பணியாற்ற வேண்டும்.ஆங்காங்கே சில அதிகாரிகள் ஊழலில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, சிவில் சர்வீஸ் அதிகாரிகள், தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் நமது கடமைகளையும், பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும்.சிவில் சர்வீஸ் அதிகாரிகள், நேர்மையான முறையிலும், பகிரங்க போட்டி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதனால், மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.நேர்மை, ஒளிவுமறைவின்மை, பாரபட்சமின்மை, முறை தவறாமை, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு மிகவும் முக்கியம். இவை எல்லாம் நமது முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.இவ்வாறு சந்திரசேகர் கூறியுள்ளார்.
அரசு செயலர்களுக்கு எதிரான புகார்களை விரைவாக பரிசீலிக்க, கேபினட் செயலர் சந்திரசேகர் தலைமையில் மத்திய அரசு உயர்மட்டக் குழு ஒன்றை சமீபத்தில் நியமித்தது. இந்தச் சூழ்நிலையில், அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் விடிவு காலம் : புதுடில்லி: கடந்த பல மாதங்களாக விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கவுள்ளது. மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை வரும் 31ம் தேதி முடிவுக்கு வருவதே காரணம்.மத்திய அரசு கடந்த நிதியாண்டிற்கு வெளியிட்ட சிக்கன நடவடிக்கை தொடர்பான அறிவிக்கை, வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிதாக ஒரு உத்தரவு பிறப்பித்தால் அன்றி, தற்போதைய உத்தரவு ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகு பொருந்தாது.மத்திய அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவு ஒவ்வொரு அரசுத் துறைக்கும் பொருந்தும். இருந்தாலும், “விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணிக்க வேண்டாம், எகானமி வகுப்பில் மட்டுமே பயணிக்கவும்’ என, அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.சில அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், உத்தரவை கண்டிப்பாக பின்பற்றும்படி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததால், வேறு வழியின்றி பின்பற்றினர்.
Leave a Reply