லண்டன் : பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ராட்சத மிருகமான டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் இனம் அழிந்து ஆறரை கோடி ஆண்டுகள் ஆகின்றன, என பல்வேறு நாட்டு அறிஞர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.
பூமியில் ஏராளமான உயிரினங்கள் உலாவி கொண்டிருக்க, இந்த ராட்சத இனம் எப்படி அழிந்தது என்பது, புரியாத புதிராக இருந்து வருகிறது. வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக சிலரும், எரிமலை சீற்றத்தில் சிக்கி இந்த இனம் அழிந்து விட்டதாக சிலரும் கூறி வருகின்றனர்.
இதுவரை கிடைத்த டைனோசரின் எலும்புகள் உள்ளிட்ட பாகங்களை கொண்டு, அதன் அழிவு குறித்து உலகம் முழுவதும் உள்ள 41 விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடந்த 20 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டது. பல கோடி ஆண்டுகளாக பூமியில் உலாவி வந்த இந்த மிருக இனம், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் மீது மோதிய விண்கல்லால், முற்றிலும் அழிந்து விட்டதாக இந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மெக்சிகோ நாடு அமைந்துள்ள பகுதியில் 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட விண்கல், அணுகுண்டை விட வேகமாக பூமியின் மீது வந்து மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியால் பூமியில் பூகம்பமும், சுனாமியும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
விண்கல் மோதிய வேகத்தால் அணுகுண்டை விட பலமடங்கு சக்தி வாய்ந்த அதிர்வு ஏற்பட்டு பூமியில் ஏற்பட்ட கந்தக புழுதியால் உலகமே இருண்டு போய் விட்டது. பல இடங்களில் காட்டு தீ பரவியது. பூமியின் சுற்றுச்சூழலில் அதிரடிமாற்றம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஓடி ஒளியக்கூட இடம் இல்லாத காரணத்தால் டைனோசர் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போய் விட்டன என, இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Leave a Reply