சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ள சலுகைகள் மற்றும் திட்டங்களை, முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:பட்ஜெட் பற்றிய குறைகளை மட்டும் சொல்லாமல், மார்க் சிஸ்ட் கட்சியினர் நிறைகளையும் பாராட்டியிருக்கின்றனர். இதற்காக நன்றி.விவசாயிகளை அரசு கைவிட்டுவிட்டதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். கரும்பு நடப்பு அரவைப் பருவத்துக்கு விலை, டன்னுக்கு 100 ரூபாய் அதிகமாக வழங்கப்படும் என அறிவித்திருப்பதும், 2010-11 பருவத்துக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பதும் தான் விவசாயிகளை கைவிட்டதற்கான அர்த்தமா?வரும் நிதியாண்டில், விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் 2,500 கோடி ரூபாய் கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் தொகை மானியமாக 40 கோடி ரூபாய், நெல் கொள்முதல் செய்ய 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும், வரும் நிதியாண்டில், மேலும் 10 ஆயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு மானியமாக அறிவிக்கப்பட்டது 2,800 கோடி ரூபாய் தான். ஆனால், செலவழிக்கப்பட்டது 4,000 கோடி ரூபாய். அதுபோலவே, இந்த ஆண்டு 3,750 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அந்தத் தொகை போதவில்லை என்றால், மேலும் ஒதுக்கப்படும்.இலவச ‘டிவி’ வாங்க, சட்டசபையில் உள்ள அனைத்துக் கட்சிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழுவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபைத் தலைவரான சிவபுண்ணியம் இடம்பெற்றிருக்கிறார்.அவரை தா.பாண்டியன் தொடர்பு கொண்டு, ‘மத்திய அரசு கொடுக்கிற பணத்தில் தான், ‘டிவி’யை மாநில அரசு வழங்குகிறதா’ எனக் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
மேலும் அவர், ‘பட்ஜெட்டில் நிதியமைச்சர் அன்பழகன் 3,000 கோடி ரூபாய் துண்டு என்கிறார். நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன் 16 ஆயிரம் கோடி ரூபாய் துண்டு என, உண்மையைச் சொல்லுகிறார்’ எனப் பேசியிருக்கிறார். 3,000 கோடி என்பது வருவாய்ப் பற்றாக்குறை. 16 ஆயிரம் கோடி என்பது நிதிப் பற்றாக்குறை. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. இரண்டையுமே பட்ஜெட்டில் அன்பழகன் படித்துக் காட்டியிருக்கிறார்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Leave a Reply