லூதியானா: ‘உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் பிற மாநிலங்கள் மீது மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது’ என, பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பஞ்சாப் விவசாய பல்கலைக் கழக துணை வேந்தர் கூறியதாவது: உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சி தொழில் நுட்பங்களை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பது சரியானது. இதற்கு 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண, நாட்டின் 60 ஆயிரம் கிராமங்களில் எண்ணெய் விதை உற்பத்தி செய்ய, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டும் விவசாய கடன் வழங்குவது அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால், சிறிய மற்றும் நலிவடைந்த விவசாயிகள் உண்மையிலேயே பயனடைவார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது. உரம் தொடர்பான மானியங்கள் வழங்குவதில் மாற்றம், குளிர்சாதன வசதி நிறைந்த உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கு அதிகரிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது. தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத் திற்கு, 2010-11ம் நிதியாண்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட உள்ளது. இதனால், விவசாயப் பணியாளர்கள் மற்றும் நலிவடைந்த விவசாயிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தோட்டக்கலைத் துறை வளர்ச்சிக்கான திட்டங்களும் திருப்திகரமாக உள் ளது. டிராக்டருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டதால் அவற்றின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், பல்வேறு உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம். இது, விவசாயம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு பெரும் கவலையளிப்பதாக உள்ளது. எனினும், இந்த பட்ஜெட்டில், பஞ்சாப் விவசாயிகளுக்கு சில நன்மைகள் உள்ளன. இவ்வாறு பஞ்சாப் விவசாய பல்கலைக் கழக துணை வேந்தர் கூறினார்.
Leave a Reply