வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு

08-home-loan200டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.

தனியார் துறையில் அதிகளவு கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி தனது கார் கடன் வட்டியை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு 8.25 சதவீத வட்டியில் வழங்கி வந்த சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்தையும் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டது.

வட்டி உயர்வுக்கான காரணத்தை வங்கிகள் தெரிவிக்க வில்லை என்றாலும், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதே இந்த மாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அதிகரித்ததன், வாடிக்கையாளர்களின் முதலீட்டில் 5.75 சதவீதம் வரை இருப்பு வைக்க வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் கூட்டியுள்ளன. புதிய கார் லோன்களுக்கான வட்டி விகிதம் தற்போது 9.75 முதல் 11 சதவீதம் வரை உயரும் என ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

தற்போது ஐசிஐசிஐ வங்கி, வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை 8.75 சதவீதமும், ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை 9 சதவீதமும், ரூ.50 லட்சத்துக்கு மேல் 9.5 சதவீத வட்டியிலும் வழங்கி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் புதிய கடன்களுக்கு இந்த வட்டி வகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரிக்கும்.

அதேபோல், கார் லோன் பிரிவில், 35 மாதங்கள் வரையிலான கடன்களுக்கு 9 முதல் 13 சதவீதமும், 36 முதல் 60 மாத கடனுக்கு 8.75 முதல் 12.5 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு காரணமாக கார்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், வட்டி விகிதமும் அதிகரித்திருப்பது கார் வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தர சம்பளதாரர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிஐசிஐ போலவே ஹெச்டிஎஃப்சி, கோடாக் மஹிந்தரா வங்கிகளும் தங்களின் கார் கடன் மீதான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன.

இந்த மூன்று வங்கிகளிலும் புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐயும் தனது வட்டி விகிதத்தை திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *