வேண்டாம் ரகசிய ஒப்பந்தம்: அத்வானி

posted in: மற்றவை | 0

advaniஇந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள்,காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டுடன் ரகசியமாக பேச்சு நடத்தி ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை எச்சரித்தார் லால் கிருஷ்ண அத்வானி.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் புதன்கிழமை 75 நிமிஷங்கள் பேசினார் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி. அவருடைய பேச்சின்போது பிரதமர் மன்மோகன் சிங் இருமுறை குறுக்கிட்டு மறுப்பு தெரிவித்தார்.

“இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் சமீபத்தில் தில்லியில் சந்தித்துப் பேசியதற்குக் காரணமே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அரசுக்கு அளித்த நெருக்குதல்தான் என்கிறார்கள். பராக் ஒபாமா அதிபர் பதவிக்கான தேர்தலின்போதே, தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய இருதரப்பு பிரச்னை; அதில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கு இடமே இல்லை என்பதுதான் நாம் இதுவரை கடைப்பிடித்துவரும் நிலை. இதைத்தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் கடைப்பிடித்து வந்தன. இப்போது அமெரிக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் போலத் தெரிகிறது.

பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போக, அதிகாரப்பூர்வமற்ற ராஜீய ஆலோசனைகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நிலைமையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை சமீபத்தில் நடந்த வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட அந்த நாடு தெளிவுபடுத்திவிட்டது.

இரு நாடுகளிடையே நடந்த பேச்சு சுமுகமாக இருந்தது என்று நம்முடைய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் நிருபர்களிடம் தெரிவித்தனர். மீண்டும் சந்தித்துப்பேசுவது என்று முடிவு செய்திருப்பதாக நிருபமா குறிப்பிட்டார். ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலரோ, இந்திய நிருபர்கள் கேட்டதற்கு, காஷ்மீர் தொடர்பாக எங்களுக்கு உபதேசம் செய்வதை நிறுத்துங்கள் என்று எரிச்சலாகவே பதில் அளித்தார்.

எங்களுடைய முக்கிய கோரிக்கையே காஷ்மீர் பற்றியதுதான்; காஷ்மீருக்கு முழுச் சுதந்திரம் வாங்கித் தர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலை என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறார். இதில் நம்முடைய முயற்சிகளுக்கு என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்று அரசு சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியர்கள் விரும்பினால் மீண்டும் இந்தியக் காஷ்மீரத்துக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். வருகிறவர்கள் இங்கே சுமுகமாக வாழத்தான் வருவார்கள் என்று என்ன நிச்சயம், அவர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது, அவர்களால் காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் கிடைத்தால் அதை எப்படி கட்டுப்படுத்துவது?

இந்திய தரைப்படை தலைமை தளபதி தீபக் கபூர் நிருபர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கட்டமைப்பு அப்படியே வலுவாக இருக்கிறது, இந்தியாவுக்குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட 700-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பால் காத்திருக்கிறார்கள் என்று ராணுவத்துக்குக் கிடைத்த உளவுத்தகவல்களின் அடிப்படையில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் அவர்களுடன் பேச முடிவுசெய்தீர்கள்? பூனா நகரில் நடந்த குண்டு வெடிப்பிலும் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் கைவரிசை இருப்பதாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்தோமே அதற்குப் பாகிஸ்தான் கூறிய பதில் என்ன, எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன? பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கும்வரை அதனுடன் பேச மாட்டோம் என்று அறிவித்த நீங்கள் (மன்மோகன் அரசு) அந்த முடிவை மாற்றிக்கொள்ளும் வகையில் பாகிஸ்தானிடம் ஏற்பட்டுவிட்ட மாற்றம்தான் என்ன?’ என்றார் அத்வானி.

வாக்குவாதம்: பாகிஸ்தான் அரசுடன் இந்திய அரசு நடத்தும் ரகசிய பேச்சு விவரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று கோரினார் அத்வானி.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ஆக்ரோஷமாகக் குறுக்கிட்டார். உங்கள் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஸ்ட்ரோப் தல்போட்டுடன் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் 12 முறைக்கும் மேல் ரகசியமாகப் பேசினாரே, அதையெல்லாம் நாடாளுமன்றத்துக்கு அவ்வப்போது தெரிவித்தீர்களா, இப்போது மட்டும் ஏன் எங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்று கேட்டார்.

ராணுவத்தில் பணியாற்றி வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஒரே மாதிரியான பதவி வகித்தவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார், அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று அத்வானி கேட்டார்.

அப்போதும் மன்மோகன் சிங் குறுக்கிட்டுப் பேசினார். ராணுவ வீரர்களுக்கும் எங்களுக்கும் இடையே பிளவை உண்டாக்கப் பார்க்காதீர்கள் என்றார் மன்மோகன்.

பிளவை நான் ஏன் உண்டாக்கப் போகிறேன், கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்றுதான் கேட்டேன், இந்த கோரிக்கையை ஏற்றால் ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.2,100 கோடி செலவிட வேண்டும் என்று உங்கள் நிதியமைச்சர் 2008 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் என்பதை நினைவூட்டவே விரும்புகிறேன் என்றார் அத்வானி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *