கோவை, மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 200 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.
÷அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு வரும் ஆண்டுக்கான பட்ஜெட், செயல்திட்டம் தயாரிப்பு தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை துவங்கியது. பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் இப் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
÷அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
÷இத்திட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு தமிழகத்துக்கு ரூ.139.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் 200 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 7 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 1,400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
÷மேலும் இப்பள்ளிகளுக்கு கட்டடம், வகுப்பறைகள், நூலகம், ஆய்வகங்கள், கழிவறை உள்ளிட்ட வசதிகளுக்காக தலா ரூ.58.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
÷அதேபோல, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் பள்ளிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்படி 4 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் செலவில் வசதிகள் செய்துதரப்படும்.
÷தமிழகம் முழுவதும் 144 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அதேபோல தலா 100 மாணவியர் தங்கும் வகையில், 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட உள்ளன.
Leave a Reply