புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
இயற்கையை பேணிகாக்கும் சர்வதேச நிதி அமைப்பு, உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு, பெருநகரங்களில் மார்ச் கடைசி சனிக்கிழமை அன்று இரவு, ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கக்கோரி வருகிறது. இதன் மூலம் கணிசமான மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த நடைமுறை துவங்கியது. 2008ம் ஆண்டில் விளக்கு அணைக்கும் நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட, 35 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரம் நகரங்களில் விளக்கு அணைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியின் மூலம், டில்லியில் மட்டும் 700 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. ஒரு மணி நேர விளக்கணைப்பு நிகழ்ச்சியில் டில்லியும், மும்பையும் நம்நாட்டில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆண்டு வரும் 27ம் தேதி நடக்கவுள்ள விளக்கு அணைப்பு நிகழ்ச்சிக்கு, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆதரவளித்துள்ளார்.
வரும் 27ம் தேதி, வீட்டில் உள்ளவர்கள் இரவு நேர உணவை மெழுகுவர்த்தியின் ஒளியில் சாப்பிடும் படியும், ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒரு மணி நேரத்துக்கு விளக்கை அணைக்கும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், பூமியை காக்கும் விளக்கணைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி படப்பிடிப்பின் போது விளக்கணைக்க வற்புறுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தினரும் இதை வற்புறுத்துவார்கள் என, அபிஷேக் தெரிவித்துள்ளார். டில்லி, மும்பையைத் தொடர்ந்து சென்னை, ஆமதாபாத், புனே, ஐதராபாத், பெங்களூரு, கோல்கட்டா நகரங்களும் வரும் 27ம் தேதி விளக்கணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.
Leave a Reply