தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் இந்த மாதத்துக்குள் அமல் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத் திட்டத்தை 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் இந்த தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் அமல் செய்யப்படுகிறது.
இத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல்தான் செயல்பாட்டுக்கு வரும் என்றாலும் மத்திய அரசின் உத்தரவு அடிப்படையில் இந்த நிதியாண்டுக்குள் இத் திட்டம் தொடங்கப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதியைப் பெற முடியும். அதனால் இத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இத் திட்டத்துக்கு மத்திய அரசு 75 சதவீத நிதியுதவி அளிக்கிறது. 25 சதவீத நிதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் இருந்து இடையில் நிற்பதைத் தவிர்த்தல், பள்ளிகளை மேம்படுத்துதல், புதிய பள்ளிகள் திறத்தல், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், தரமான கல்வி உள்ளிட்ட இலக்குகளை நோக்கி இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தனியார் பள்ளிகள் இத் திட்டத்தை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் வலியுறுத்தி வருவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போதுதான் அரசின் முழுமையான இலக்கை அடைய முடியும் என்று அந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply