புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் என்பார்கள் அது போல சமீப காலமாகவே உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்ட விரோத மற்றும் பெரும் ஊழல் விஷயங்களில் சிக்கி வருகின்றனர். பல கோடிகள் விழுங்கிய மருத்துவ கவுன்சில் தலைவர் தேசாய் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள் இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறை செயலர் என்பது இவரது பொறுப்பு. சார்க் மாநாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை குறித்து பேச வருமாறு கூறி போலீசார் டில்லியில் நாசுக்காக கைது செய்தனர்.
இவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியமாக வைத்து விசாரிக்கப்பட்டு வருவதில் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த உளவு காரியங்களை செய்து வந்திருக்கிறார். குறிப்பாக இவர் பாகிஸ்தானில் உள்ள உளவு துறை அதிகாரி ராணா என்பவருடன் காதல் வயப்பட்டாராம். மேலும் இவருக்கு பணம் என்றால் கொள்ளை பிரியமாம் . ( நம்ம தேசாயை விடவா ? ) இதன் காரணமாக தனது பணியை ஒழுங்காக செய்யாமல் உளவுக்கு தகவல் சொல்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார்.
டாக்கடர் தம்பதியினருடன் உறவு : இவருடன் 14 பேர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கின்றனர். இதில் 10 பேர் இந்தியர்கள் 4 பேர் பாகிஸ்தானியர்கள். இந்த 14 பேரும் மாதுரியின் உளவு செயல்களுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் டாக்டர் தம்பதியினருடன் தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கும் வந்து தங்கி இருந்திருக்கிறார் மாதுரி . இவருடன் துணையாக இருந்த இந்திய அதிகாரிகளை தற்போது உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இவரது போன் மற்றும் மெயில் தொடர்பு மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது.
ராணுவ ரகசியங்களை காசக்கினார்: குறிப்பாக ராணுவ ரகசியங்களை விற்று காசாக்கியிருக்கிறார், இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ. கே., அந்தோணி கூறுகையில் இது சீரியஷான விஷயம் முழுக்கவனம் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.நம்பிக்கை , மோசடிக்கு பேர் போன இந்த பெண் அதிகாரி குறித்து இன்னும் புதிய திடுக் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது .
Leave a Reply