மும்பை: மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 27.8 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தங்கத்தின் விலை சற்று குறைந்தது தான்.
ஆகவே, அட்சய திருதியை காலத்தில் தங்கம் அதிகம் விற்பனை ஆகும் என்றும், அதிக விலை உயர்வு இருக்காது என்றும் கருதப்படுகிறது. தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால், அதன் இறக்குமதியும் அதிகரித்துள்ளது என்கின்றனர் நிபுணர்கள். கடந்த ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை, வரலாறு காணாத வகையில் 18 ஆயிரத்து 500 ரூபாயைத் தொட்டது. எனினும், 2009 டிசம்பரிலிருந்து 16 ஆயிரம் ரூபாய்க்கு சற்று முன்பின்னாக இருந்து வருவதும், தங்கத்தின் இறக்குமதி அதிகரித்ததற்கு காரணம் என்கின்றனர்.
பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹுண்டியா கூறுகையில், ‘மார்ச்சில் தங்கம் விலை 10 கிராம் 16 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. விலையில் அதிகளவில் ஏற்றத்தாழ்வு இல்லாததால் இறக்குமதி அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார். இருப்பினும், மார்ச் மாதத்தை விட, பிப்ரவரியில் 28.8 டன் தங்கம் இறக்குமதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 16ம் தேதி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அட்சய திருதியையின் போது தங்கத்தின் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இறக்குமதி அளவு இந்த இரு மாதங்களில் அதிகரித்திருக்கிறது.
Leave a Reply