சென்னை:”தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சித்த மருத்துவ பிரிவு துவக்கப்படும். மக்கள் நலன் கருதி, நவீன மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் பேதமின்றி பணியாற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
செம்மொழி தமிழாய்வு மையம் சார்பில், தமிழ் மருத்துவத்தின் தொன்மையும், தனித்தன்மையும் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழக பவள விழா அரங்கில் நேற்று துவங்கியது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கருத்தரங்கைத் துவக்கி வைத்து, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பண்டைய தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பு, உலக அறிஞர்களால் இன்று பாராட்டப்படுகிறது. சங்க இலக்கிய கருவூலங்களின் வாயிலாகத் தான் பண்டைத் தமிழகம், அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், கலை, பண்பாடு அனைத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளனர். அதைப் போலவே மருத்துவத் துறையிலும் பழந்தமிழகம் சிறந்து விளங்கியிருக்கிறது என்பதற்கும், எண்ணற்ற சான்றுகள் உள்ளன.தமிழ் மருத்துவத்தை போற்றி வளர்க்கும் வகையில், தமிழகத்தில் பல சித்த மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. மகப்பேறு மற்றும் பெண்களின் நலன் பேண, மூலிகை மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தாம்பரத்தில் 1999ல் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட தேசிய சித்த மருத்துவ நிறுவனம், இன்று சித்த மருத்துவ ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது.தமிழ் மருந்துகள் அறிவியல் பூர்வ ஆய்வுக்காக, தாம்பரம் அமிர்தா நகரில் ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியுள்ளது. படப்பை அருகே மூலிகைப் பண்ணைக்காக 25 ஏக்கர் இடம் ஒதுக்க மத்திய அரசு கேட்டு, தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.மக்கள் நலன் கருதி நவீன மருத்துவர்கள், சித்த மருத்துவர்களும் பேதமின்றி பணியாற்ற வேண்டும். தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகளில் உள்ளவற்றை நூல்களாக்க முயற்சி எடுக்க வேண்டும். பல மொழிகளிலும் அந்த நூல்கள் வெளிவந்தால் தமிழ் மருத்துவத்தின் பெருமை தரணியெங்கும் பரவும்.மூலிகைகளை பாதுகாப்பது, ஆராய்ச்சியில் சித்த மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். தமிழகத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவ பிரிவு துவங்க தமிழக அரசு முயன்று வருகிறது.
நம் மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முதல்வர் காலத்தில் பழந்தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கும் நாம் மகுடம் சூட்டுவோம்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசும்போது, ”தமிழகத்தில் மருத்துவத்தை இலக்கியம், கலையாக மட்டுமின்றி தத்துவமாகவும் பார்க்கிறோம். புதிய புதிய நோய்கள் வந்து கொண்டிருக்கும் போது, அதற்கான மருந்துகளை கண்டறிய வேண்டும்.”சித்த மருத்துவம் சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியம். நம் மூதாதையர் அதன்படி வாழ்ந்ததால் தான், நாம் வாழ்கிறோம். சித்த மருத்துவம் தமிழருக்குரியது தான். அது உலக மருத்துவமாக வேண்டும்,” என்றார்.
கருத்தரங்கில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக்குழும தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணன், துணை வேந்தர்கள் மயில்வாகனன், சபாபதி மோகன், டாக்டர் தணிகாசலம், செம்மொழி தமிழாய்வு மைய இயக்குனர் மோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Leave a Reply