அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் பாராட்டு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_6745547057சென்னை:”இந்திய மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சையை வழங்கி, முத்திரைச் சின்னமாக அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது,” என, முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டிக்கு, மருத்துவத் துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக,’பத்ம விபூஷண்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற பிரதாப் சந்திர ரெட்டிக்கு, சென்னையில் நேற்று நடந்த பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றதனால் ரெட்டிக்கு பெருமையா அல்லது விருதுக்கு பெருமையா என்றால், விருதுக்கு தான் பெருமை. இந்திய மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சையை வழங்கி, முத்திரைச் சின்னமாக அப்பல்லோ மருத்துவமனை விளங்கி வருகிறது.

மற்ற மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தொலை நோக்கு மருத்துவ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 500 மருத்துவ நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.அதில், 100 மருத்துவ நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்துடன், அப்பல்லோ குழுமம் இணைந்து இத்திட்டதை செயல்படுத்தியுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், ஒரு கோடியே 56 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். 108 அவசர சிகிச்சை சேவைத் திட்டம் இன்று மக்களிடையே பிரபலமடைந்துள்ளது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேட்டன் தேசாய், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சந்திர ரெட்டி மற்றும் சன்மார் குழும துணைத் தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *