இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்

posted in: உலகம் | 0

கொழும்பு, ஏப். 1: இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார்.

÷இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் போரால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைப்பதற்காக இந்தியா அனுப்பியுள்ள சிமெண்ட் மூட்டைகளை இலங்கையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கொழும்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியத் தூதர் அசோக் கந்தா மேலும் பேசியது:

இலங்கை அரசு முன்வைக்கும் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் இந்த உதவிகளை இந்தியா அளிக்கிறது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால், இந்தியா தனது உதவிகளை விரைவுபடுத்தி வருகிறது என்றார் அவர்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வீடுகளைச் சீரமைக்கவும் இந்தியா மொத்தம் 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகளை வழங்கவிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 10,000 சிமெண்ட் மூட்டைகளை இலங்கையின் மறுகுடியமர்த்துதல் மற்றும் பேரழிவு நிவாரணப் பணிகள் அமைச்சகச் செயலர் யு.எல்.எம். ஹால்தீனிடம் இந்தியத் தூதர் அசோக் கந்தா ஒப்படைத்தார்.

எஞ்சியுள்ள சிமெண்ட் மூட்டைகளை அடுத்த 40-45 நாள்களில் இலங்கைக்கு தினமும் ஒரு தொகுப்பு என்ற அடிப்படையில் இந்தியா வழங்கும்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் மீண்டும்

குடியேறியுள்ள தமிழர்களுக்கு இந்த சிமெண்ட் மூட்டைகளை அதிகாரிகள் விநியோகிப்பர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 சிமெண்ட் மூட்டைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கொண்டு தங்களது வீடுகளை அவர்கள் சீரமைத்துக் கொள்ளலாம்.

இலங்கையில் போரால் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக, இந்தியா ஏற்கெனவே 5.30 லட்சம் தகர ஷீட்டுகளை வழங்கியுள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1,250 கோடி வழங்கப்படும் என இந்தியா கடந்த ஆண்டு, மே மாதம் அறிவித்தது. இந்த நிதியுதவியின் கீழ், இலங்கைக்கு மொத்தம் 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்தியா அளிக்கும் நிதியுதவியிலிருந்து இலங்கையின் வடக்குப் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் சீரமைக்கப்படும்.

இதுதவிர, இலங்கையின் வடக்குப் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதைகளைச் சீரமைக்க இந்தியா சுமார் ரூ. 1,912 கோடியை கடனுதவியாக அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *