இளம் விஞ்ஞானிகளாகும் கிராமப்புற மாணவர்கள்

posted in: கல்வி | 0

ஓமலூர்.ஏப்.28: ​ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவதற்காக 20 நாள் அடிப்படை அறிவியல் பயிற்சி முகாம் மே 3-ந்தேதி தொடங்குகிறது.

​ தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 9.79 லட்சம் மாணவர்கள் ​ பயில்கின்றனர்.​ இவர்கள் நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும்போது 10 ஆயிரம் பேர் வரை குறைந்து 9.69 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.​ அதற்கு மேல் 10-ம் வகுப்பிற்கு செல்லும்போது 9.50 லட்சமாகவும் பனிரெண்டாம் வகுப்பில் 33 சதவீதம் குறைந்து 6.40 லட்சமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை மாறிவிடுகிறது.

​ கிராமபுற மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே அறிவியல் பாடங்கள் குறித்த புரிதலையும் உயர்கல்வி குறித்த தெளிதலையும் உருவாக்கும் ​ வகையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு அறிவியல் தொழில் மன்றமும் இணைந்து இளம் மாணவர் அறிவியல் திட்டத்தினை செயல்படுத்தவுள்ளது.

​ ​ கிராமப்புற மாணவர்களிலிருந்து இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கத்தில் வரும் மே 3-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தொடர்ந்து இருபது நாட்கள் அடிப்படை அறிவியல் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உண்டு உறைவிட முகாமாக நடத்தப்பட உள்ளது.

​ இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு கூறியது:

​ ​ இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முடித்து தற்போது 10-ம் வகுப்பு செல்ல உள்ள மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

​ ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அறிவியல் பாடங்களில் முதலிரண்டு மதிப்பெண் ​

பெற்ற மாணவர்கள் பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.​ நாள்தோறும் காலை 7 மணிக்கு யோகா பயிற்சியோடு தொடங்கும் முகாமில் காலை வேளைகளில் அறிவியல் பாடங்கள் கற்றுத் தருவதும் மதியம் முழுவதும் அதற்கான செய்முறை ​

பயிற்சியும் மாலை நேரத்தில் விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும்.

​ திட்டமிட்ட பாடத்திட்டம் என்று எதுவுமின்றி வகுப்பு எடுப்பவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.​ விளையாட்டு முறையிலும் பாடங்கள் கற்றுத்தரப்படும்.

​ ​ இயற்பியல்,​​ வேதியியல்,​​ உயிரியல்,​​ சுற்றுச்சூழல்,கணினி அறிவியல்,​​ உளவியல்,​​ ஆங்கிலம்,​​ கணிதம்,​​ புவி அமைப்பியல்,​​ உயிர் வேதியியல்,​​ உணவு அறிவியல்,​​ நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.

​ மேலும் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து செய்முறைப் பயிற்சி உடனுக்குடன் வழங்கப்படும்.​ தொழிற்சாலைகளுக்கும் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட ​ உள்ளனர் என்றார்.

​ ​ ஒவ்வொரு மாணவரும் பள்ளிப் படிப்பை முடித்து மேல்நிலை பட்டப்படிப்பு செல்லும்போதுதான் முனைவர் பட்ட ஆய்வு குறித்த நடைமுறைகள் குறித்து யோசிக்க தொடங்குகின்றனர்.​ உயர்நிலைப் பள்ளியின்போதே இதுகுறித்த புரிதலை ஏற்படுத்திவிட்டால் கிராமபுறத்தை சேர்ந்தவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து ​தெளிவாக அறிந்து தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகும்.​ ​ பள்ளி பாடத் தேர்வுகளில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ​அடிப்படை அறிவியலை செய்முறை பயிற்சியுடன் தரும் இந்த முகாம் வாயிலாக ​கிராம பகுதியிலிருந்து விஞ்ஞானிகள் உருவாகும் வாய்ப்பு தமிழகத்திற்கு கிடைக்கும்.​ ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *